அடிக்கிற வெயிலுக்கு எட்றா வண்டிய.. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்.. முதல்வரும் கிளம்பிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 நாட்கள் ஓய்வு எடுக்க வரும் ஏப்ரல் 29ம் தேதி கொடைக்கானலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Apr 27, 2024 - 20:36
அடிக்கிற வெயிலுக்கு எட்றா வண்டிய.. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் அரசியல் தலைவர்கள்.. முதல்வரும் கிளம்பிட்டார்

தமிழ்நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் குளுகுளு பிரதேசங்களை நோக்கி அரசியல்தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக கொடைக்கானலில் உள்ள ரிசார்ட்களில் அரசியல் தலைவர்கள் குவிந்து வருகின்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நிறைவடைந்த நிலையில் ஜூன் 4ஆம் தேதி வரப்போகும் முடிவுக்காக பக் பக் மனநிலையில் இருந்தாலும் கொஞ்சம் சில் பண்ணலாம் என குடும்பத்தோடு கிளம்பி விட்டனர். 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குன்னூர் உள்ளிட்ட நகரங்களிலும் ரிசார்ட்கள் நிரம்பி வழிகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சேலம் மாவட்டம் ஏற்காடு, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி, நாமக்கல் மாவட்ட கொல்லிமலை ஆகிய மலைப்பகுதிகள் உள்ள ரிசார்ட்களிலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் குடும்பத்தோடு குவிந்துள்ளனர்.

ஏப்ரல் 29ம் தேதி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடன் கொடைக்கானல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 நாட்கள் அங்குள்ள தனியார் சொகுசு தங்கும் விடுதியில் அவர் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். முதல்வர் வருகையை ஒட்டி, நெடுஞ்சாலை துறை சார்பில் கொடைக்கானல் வத்தலக்குண்டு சாலையில் பராமரிப்பு பணிகளும் தொடங்கியுள்ளன.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதனை திமுக வட்டாரங்கள் மறுத்தன.  இந்த நிலையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் செல்வதற்காக 29ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் வத்தலக்குண்டு பிரதான சாலை வழியாக கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. கொடைக்கானலில் 29 முதல் மே 4 வரை ஓய்வு எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முதல்வரின் வருகையை அடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஐஏஎஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஐபிஎஸ் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக இன்று கொடைக்கானலில் ஆய்வு மேற்கொண்டனர். 2021ல் சட்டசபை தேர்தல் முடிந்த பின் முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் பாம்பார்புரம் தனியார் விடுதியில் ஒரு வாரம் தங்கினார். இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிந்து ஓய்வுக்காக அதே ஓட்டலில் தங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையே தமிழக பாஜக தலைவரும், கோவை லோக்சபா தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை இரு தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இதேபோல் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலுக்கு வந்து முகாமிட்டுள்ளனர்.

இதே போல் தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வனும் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகின்றார். குளு, குளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு ஏற்கனவே பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கொடைக்கானல் களைகட்டியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக உடன் பிறப்புகள் நீலகிரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். வேலூர் திமுக மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏபி நந்தகுமார். அங்கு உள்ள படுகர் இன மக்களுடன் சேர்ந்து அவர்களின் பாரம்பரிய நடனத்தை ஆடியுள்ளார் இந்த காணொளி தற்போது வெளியாகி பரவி வருகிறது. அடிக்கிற வெயிலுக்கு எட்றா வண்டிய என்று எல்லோரும் குளு குளு பிரதேசங்களில் சில் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow