ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும் தங்கம்.. ரூ.51,000-ஐ கடந்த சவரன் .. உச்சத்திற்கு செல்ல காரணம் என்ன?
தங்கத்தின் விலை இன்று(29.03.24) மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. 22 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ.6,390க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு சவரன் தங்கம் 51,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வது இந்தியர்களின் பாரம்பரியமான வழக்கம். மகளின் திருமணத்திற்கு சீதனமாக தருவதற்காகவே தங்கத்தை சேமித்து வைப்பார்கள். பாட்டி காலத்தில் ஒரு கிராம் 50 ரூபாய் விற்பனையான தங்கம், அம்மாவின் காலத்தில் ஒரு கிராம் 500 ரூபாய்க்கு விற்பனையானது. இன்றைக்கு ஒரு கிராம் 6000 ரூபாயைக் கடந்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாகவே தங்கம் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னையில் கடந்த 19ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.49,080க்கு விற்பனையானது. இது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வந்தது. நேற்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் புதிய உச்சத்தை எட்டி, ரூ.50,000 ஆக விற்பனையானது. நேற்றைய தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,250-க்கு விற்பனையானது.
இன்றைய தினம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் நேற்றைய விலையை விட ஒரு கிராம் தங்கம் ரூ.140 உயர்ந்து, ரூ.6,390ஆக விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு சவரனுக்கு 1,120 ரூபாய் விலை உயர்ந்து, 51,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ரூ.140 விலை உயர்ந்து ஒரு கிராம் 6,860-க்கும் விற்பனையாகிறது.
மறுபுறம், வெள்ளி விலையும் ஒரு கிராம் 30 பைசா உயர்ந்து, 80 ரூபாய் 80 பைசாவிற்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 300 உயர்ந்து ரூ.80,800ஆக விற்பனையாகிறது.
தங்கம் விலை 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். 2025ஆம் ஆண்டுக்குள் தங்கம் ஒரு கிராம் 7500 - 8000 ரூபாய் வரை செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது, ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் விலை அதிகரித்து வருகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இனி வரும் காலங்களில், தங்கம் விலை மேலும் அதிகரிக்கும். வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தைத் தொடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?