போஸ்டர் ஒட்டுனது யாருன்னு எனக்கு தெரியும் - முத்தரசன்
திருவாரூரில் 'கண்டா வரச் சொல்லுங்க' என எம்.பி.களை விமர்சித்து போஸ்டர்களை ஒட்டிய யோக்கியவான்கள் பெயரை போட்டு போஸ்டர் ஒட்டலாமே என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
திருவாரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட குழு சார்பில், தேர்தல் நிதி வழங்கும் நிகழ்வு மற்றும் மாவட்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், "திமுக தலைமையிலான கூட்டணியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்துள்ளன. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தீர்மானிக்கப்படும். அனைத்தும் மிக சுமூகமாக முடியும்" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து 'கண்டா வரச் சொல்லுங்க' போஸ்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்த முத்தரசன், "தமிழகம் முழுவதும் இந்த போஸ்டரை ஒட்டி இருக்கிறார்கள். இப்படி போஸ்டர் ஒட்டுகிற யோக்கியவான்கள் தங்களது பெயரை போட்டு போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும். அல்லது அவர்கள் கட்சி பெயரை போட்டு ஒட்ட வேண்டும். யார் இந்த போஸ்டர்களை ஒட்டுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டு இருக்கிறது.
திருடன் மாதிரி எதற்கு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டுகிற ஒரு நபர் யார் என்பதை பகிரங்கமாக சொல்ல முடியாத அவலநிலைக்கு இந்த கட்சிகள் எல்லாம் ஆளாகி இருக்கின்றன. அது அதிமுகவா? பாஜகவா? யார் என்று தெரியவில்லை. ஏன் இப்படி திருட்டுத்தனமாக பண்ண வேண்டும்.
குற்றசாட்டுகள் முன்வைக்க வேண்டுமென்றால் நாங்கள் பகிரங்கமாக சொல்வோம். ஆனால், அந்த முதுகெலும்பு இல்லாதவர்கள் இப்படி வால் போஸ்டர்களை ஒட்டுகிறார்கள். இந்த வால்போஸ்டர்கள் எங்களை ஒன்றும் செய்யாது. இந்த வால்போஸ்டர்கள் கழுதைக்கு நல்ல தீனி அவ்வளவுதான், அதுக்கு மேல் ஒன்றும் கிடையாது" என்று தெரிவித்தார்.
What's Your Reaction?