ஓரங்கட்டப்படும் செங்கோட்டையன்...? இதுதான் சீனியருக்கான மரியாதையா? கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்!
தவெக அமைச்சரவையின் மூப்பு பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இப்பட்டியலில் செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தவெக அரசு மீதும் விஜய் மீது விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் அமைச்சரவை மூப்பு பட்டியல் என்பது மிக முக்கியமான ஒன்று. இது வெறும் அமைச்சர்களின் பெயர் வரிசை பட்டியல் மட்டுமல்ல, சட்டமன்றத்தில் அமைச்சர்கள் அமரும் இடம் தொடங்கி, அரசு நிகழ்வுகளில் வழங்கப்படும் முன்னுரிமை என அனைத்திலும் இந்த பட்டியல் அடிப்படையில் தான் முக்கியத்துவம் வழங்கப்படும்.
ஏற்கனவே, கடந்த மே 10 ஆம் தேதி விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, அவருடன் சேர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உட்பட 10 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதன்பிறகு கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரும் விதமாக அமைச்சரவையில் இடங்கள் வழங்கப்பட்டு 35 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவையாக தவெக அமைச்சரவை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் முன்னர் கூறியதுபோலவே, சட்டமன்றத்தில் முன்னுரிமை வழங்கப்படும் அமைச்சரவை மூப்பு பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த பட்டியலில், முதலமைச்சரான விஜய் முதன்மை வகிக்க, அமைச்சர்களான ஆனந்த், ஆதவ அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, எஸ்.கீர்த்தனா, விஸ்வநாதன் ராஜேஷ்குமார், ஷாஜஹான், வன்னி அரசு, விஜய் தமிழன் பார்த்திபன், ராஜ்குமார், சம்பத்குமார், விஜய் பாலாஜி, விக்னேஷ் என 35 உறுப்பினர்களைக் கொண்டு சீனியாரிட்டிபடி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மூப்பு வரிசையில் ஏற்பட்ட இந்த மாற்றம் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்களை கொதிக்கச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. காரணம், இந்த மாற்றம் சாதாரண நிர்வாக நடவடிக்கையாக மட்டுமில்லாமல், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
இத்தகையச் சூழலில், செங்கோட்டையன்... எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி. ஜெயலலிதாவே புகழாரம் சூட்டிய ஒரு முக்கியப்புள்ளி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதலமைச்சராகும் வாய்ப்பு இவருக்குத்தான் இருந்தது. எடப்பாடி மீதான அதிருப்தியால் தவெகவிற்கு வந்த அவருக்கு, விஜய் கொடுக்கும் மரியாதை இதுதானா? இதுதான் ஒரு சீனியர் அரசியல்வாதியை நடத்தும் விதமா? தவெகவிலேயே சூப்பர் சீனியர் செங்கோட்டையன் தான், அவரைவிடவா ஆனந்தும் ஆதவ் அர்ஜுனாவும் அருண்ராஜூம் சீனியர்கள்? அதிமுக ஆதரவாளர்களை கவருவதற்காக மட்டுமே செங்கோட்டையனை பயன்படுத்துனீர்களா? என செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் தவெக மீதும் விஜய் மீதும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
மேலும், ஏற்கனவே அவருக்கு நிதித்துறையை கொடுத்து பிறகு வேறு துறை ஒதுக்கிவிட்டீர்கள்.. இப்போது அவரையும் ஓரங்கட்டுகிறீர்கள்.. இதுதான் உங்க ஒழுக்கமா? எம்.ஜி.ஆரை விட அதிக வாக்குகள் வாங்கியதால் மட்டும் நீங்கள் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது... எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதிகளை மதிக்கக் கற்றுக் கொள்வதே முக்கியம் என்று விஜய் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள்.
What's Your Reaction?