'தமிழ்நாடு' பெயர் சூட்டப்பட்ட நாள்.. முதலமைச்சர் விஜய், ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Jul 18, 2026 - 11:30
Jul 18, 2026 - 10:58
'தமிழ்நாடு' பெயர் சூட்டப்பட்ட நாள்.. முதலமைச்சர் விஜய், ஸ்டாலின் வாழ்த்து!

முதலமைச்சரின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில், "தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக, சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி, கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!

தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.

எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை. 1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!

தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே தமிழ்நாடு நாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow