ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை ! ஆனா இது புது CASE -ஆம் !

தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த 2006-ம் ஆண்டு காலகட்டத்தில் எழுந்ததாக கூறப்படும் பழைய புகார் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

Oct 5, 2026 - 11:59
ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை ! ஆனா இது புது CASE -ஆம் !
2006 Kerala Case: Fresh Probe Ordered against Gyanesh Kumar !

தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தொடர்பான சுமார் 20 ஆண்டுகள் பழமையான புகார் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. 2006-ம் ஆண்டு கேரள பொதுப்பணித்துறை செயலாளராக அவர் பணியாற்றிய காலகட்டத்தில் எழுந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் விரிவான விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி பதவியிலிருந்து ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சியினரால் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் , இந்தப் பழைய புகார் மீண்டும் விசாரணைக்கு வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

2006-ல் எழுந்த புகார் என்ன ?

ஞானேஷ் குமார் கேரள கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தபோது, மாநிலத்தின் பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றியுள்ளார். 2006-ம் ஆண்டு அவர் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த காலத்தில், கேரள மாநில போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சாலைப் பணிகள் தொடர்பாக சில புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

உலக வங்கி நிதியுதவியுடன் சுமார் ரூ.215 கோடி மதிப்பில் அங்கமாலி முதல் திருவனந்தபுரம் வரையிலான எம்.சி. சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளில் PATI-BEL என்ற இந்தோ-மலேசிய கூட்டமைப்பு ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய பொறியாளர் மரணம் :

இந்த திட்டத்துடன் தொடர்புடைய மலேசிய பொறியாளர் லீ சீ பீன், பணிகள் நடைபெற்ற காலத்தில் பல்வேறு புகார்களை முன்வைத்ததாக கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

பின்னர் மலேசியா திரும்பிய லீ சீ பீன் அங்கு உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாகவும், அவர் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்புகளில் ஞானேஷ் குமாரின் பெயர் இடம்பெற்றிருந்ததாகவும் தற்போது அளிக்கப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை விசாரணை மூலம் உறுதி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

முன்பு தொடங்கிய விசாரணை ஏன் நின்றது ?

இந்த விவகாரம் தொடர்பாக 2006-ம் ஆண்டிலேயே லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த விசாரணை பின்னர் தொடர்ந்து முன்னேறவில்லை.

அந்த காலகட்டத்தில் ஞானேஷ் குமார் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதும், வழக்கின் விசாரணை பாதியில் நின்றதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. தற்போது பழைய புகாரில் உள்ள அம்சங்கள் மற்றும் விசாரணை ஏன் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட விஷயங்களும் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளன.

மீண்டும் விசாரணைக்கு உத்தரவு :

காங்கிரஸ் தலைவர் மலயின்கீழு வேணுகோபால் அளித்த புகாரைத் தொடர்ந்து, கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

புகாரை ஆய்வு செய்ததில் விசாரணை நடத்த வேண்டிய அளவுக்கு குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தாம் கருதியதாகவும், முதலமைச்சர் வி.டி. சதீசனுடன் ஆலோசித்த பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மனோஜ் ஆபிரகாமிடம் சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதாகவும் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் :

சாலைப் பணிகள் தொடர்பான தொகையை விடுவிப்பதில் முறைகேடு, பணம் வழங்குவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான முந்தைய விசாரணையில் வெளிப்புற தலையீடு இருந்ததா? விசாரணை ஏன் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை? உள்ளிட்ட அம்சங்களையும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என்று புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் கமிஷனர் பதவியுடன் தொடர்பு இருக்கிறதா ?

தற்போது ஞானேஷ் குமார் இந்தியாவின் தலைமைத் தேர்தல் கமிஷனராக உள்ள நிலையில், அவர் கேரள பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த காலத்தைச் சேர்ந்த இந்தப் புகார் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் அவரது தற்போதைய பதவிக்காலத்தில் ஏற்பட்டவை அல்ல; 2006-ம் ஆண்டு கேரளாவில் அவர் வகித்த நிர்வாகப் பொறுப்புடன் தொடர்புடையவை என்பதே இந்த விவகாரத்தின் முக்கிய பின்னணியாகும்.

அரசியல் கட்சிகள் வரவேற்பு :

ஞானேஷ் குமாருக்கு எதிரான பழைய புகார் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதை கேரளாவின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

2006-ம் ஆண்டு சாலைத் திட்டம் மற்றும் மலேசிய பொறியாளர் உயிரிழப்பு தொடர்பான அனைத்து அம்சங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்துகள் அரசியல் கட்சிகளின் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன.

விசாரணையில் என்ன தெரியவரும் ?

சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு எழுந்த புகார் தற்போது மீண்டும் அதிகாரப்பூர்வ விசாரணைக்கு வந்துள்ளதால், அப்போதைய ஆவணங்கள், திட்டப் பணிகள் தொடர்பான பதிவுகள், பணம் விடுவிக்கப்பட்ட விதம், முன்னர் நடத்தப்பட்ட விசாரணையின் நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்குப் பிறகே புகார்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தெளிவு கிடைக்கும். தற்போதைய நிலையில், ஞானேஷ் குமார் மீது கூறப்பட்டுள்ளவை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்றச்சாட்டுகளாக மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow