இனி மைதானத்தில் 'தல'யின் ஆட்டம் இல்லை.. IPL-லில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மகேந்திர சிங் தோனி..

Nov 17, 2026 - 15:37
Nov 17, 2026 - 15:38
இனி மைதானத்தில் 'தல'யின் ஆட்டம் இல்லை.. IPL-லில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி!
Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடையாளமாகத் திகழ்ந்தவருமான மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் அவர் விடைபெற்றுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக (Team Mentor) புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக மட்டுமே விளையாடி வந்தார். 2027-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான வீரர்களைத் தக்கவைக்கும் (Retention) காலக்கெடு முடிவடையும் நிலையில், தோனி மீண்டும் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இந்தச் சூழலில், ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெறுவதாகவும், அணியின் வழிகாட்டியாகச் செயல்படுவார் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. "வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய வீரர்; ஒரு புதிய பொறுப்பு; என்றும் நீடிக்கும் பிணைப்பு" என சிஎஸ்கே நிர்வாகம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்த தோனிக்கு, கடந்த ஐபிஎல் சீசன் மிகவும் சவாலானதாக அமைந்தது. தொடருக்கு முன்பே ஏற்பட்ட கணுக்கால் காயம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கட்டைவிரல் காயம் காரணமாக அவரால் போட்டிகளில் முழுமையாகப் பங்கேற்க முடியாமல் போனது. அணியும் மூன்றாவது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது. தனது வயது மற்றும் தொடர் காயங்களைக் கருத்தில் கொண்டு, வீரராகக் களமிறங்குவதற்குப் பதிலாக அணியை வழிநடத்தும் ஆலோசகர் பொறுப்பை தோனி ஏற்றுள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூணாக இருந்து வந்த தோனி, தனது தலைமையின் கீழ் அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார். வீரராக மைதானத்தில் தோனியின் ஆட்டத்தை இனி காண முடியாவிட்டாலும், 'டீம் மென்டார்' என்ற புதிய அவதாரத்தில் சென்னை அணியுடனான அவரது பயணம் தொடர்வது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow