ஐசிசியின் அதிரடி நடவடிக்கை.. இந்திய இளம் வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபர்ட் ஆட்டமிழந்தபோது ஆக்ரோஷமாகக் கொண்டாடிய இந்திய பந்துவீச்சாளர் குர்னூர் பிராருக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

Nov 17, 2026 - 19:39
ஐசிசியின் அதிரடி நடவடிக்கை.. இந்திய இளம் வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டிம் செய்ஃபர்ட் ஆட்டமிழந்தபோது, ஆக்ரோஷமாக அவருக்கு விடை கொடுக்கும் வகையில் கொண்டாடியதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிராருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஒரு தகுதி இழப்புப் புள்ளியையும் (Demerit Point) வழங்கியுள்ளது.

கடந்த வாரம் மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 12-வது ஓவர் முடிவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குர்னூர் பிரார் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து டிம் செய்ஃபர்ட் ஆட்டமிழந்தார். அப்போது, பேட்ஸ்மேனின் முன்பாகச் சென்ற குர்னூர் பிரார், சில வார்த்தைகளைப் பேசியதுடன் மிகவும் ஆக்ரோஷமாகக் கொண்டாடி வழியனுப்பி வைத்தார்.

எதிரணி வீரரை அவமதிக்கும் வகையிலும், பதிலுக்கு அவரையும் ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றத் தூண்டும் வகையிலும் பிராரின் செயல் அமைந்திருந்ததாக ஐசிசி தெரிவித்துள்ளது. சர்வதேசப் போட்டியின்போது ஆட்டமிழக்கும் வீரரை இழிவுபடுத்தும் வகையில் சைகை செய்வதையோ அல்லது வார்த்தைகளைப் பயன்படுத்துவதையோ தடை செய்யும் ஐசிசி நடத்தை விதி 2.5-ஐ அவர் மீறியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிராரின் ஒழுங்குமுறை பதிவேட்டில் ஒரு தகுதி இழப்புப் புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் அவர் செய்யும் இரண்டாவது விதிமீறல் இது என்பதால், அவரது மொத்த தகுதி இழப்புப் புள்ளிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.
 
போட்டி நடுவர் ரஞ்சன் மதுகல்லே பரிந்துரைத்த இந்தத் தண்டனையை குர்னூர் பிரார் ஒப்புக்கொண்டதால், இது தொடர்பாக முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என ஐசிசி விளக்கமளித்துள்ளது. பொதுவாக, ஐசிசி நடத்தை விதிகளின் 'லெவல் 1' (Level 1) விதிமீறல்களுக்குக் குறைந்தபட்ச தண்டனையாக அதிகாரப்பூர்வ கண்டனமும், அதிகபட்சமாகப் போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு தகுதி இழப்புப் புள்ளிகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow