டாப் 5 ஸ்ட்ரீமிங் பிளாட்பார்ம் எது தெரியுமா? கவனத்தை ஈர்க்கும் YouTube Music!
யூடியூப் செயலியின் ஒரு பிரிவான யூடியூப் மியூசிக் தனது 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக அட்டகாசமான சில ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இசை, பாட்காஸ்ட் ஸ்ட்ரீமிங் போன்றவற்றில் பயனர்கள் மத்தியில் இன்றைய நிலையில் மிகவும் பிரபலமான தளம் என்றால் Spotify தான். மற்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் இன்று வரை Spotify இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது.
இந்நிலையில் நவம்பர் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யூடியூப் மியூசிக் தளமானது இந்தாண்டுடன் 10 ஆண்டுகளை நிறைவை செய்கிறது. இதனை கொண்டாடும் விதமாக புதிய ஆப்ஷன்களை பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. அவை என்னவென்று பார்ப்பதற்கு முன்னதாக, உலகளவில் எந்த இசை ஸ்ட்ரீமிங் பிளாட்பார்ம் முன்னிலையில் உள்ளது என்பதை காண்போம்.
ஸ்பாட்டிபை, டென்செண்ட் மியூசிக், ஆப்பிள் மியூசிக், அமேசான் மியூசிக், யூடியூப் மியூசிக் போன்றவை முறையே உலகளவில் டாப் 5 ஸ்ட்ரீமிங் தளமாக விளங்குகின்றன.
Spotify: ஸ்ட்ரீமிங் தளத்தில் 31 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை ஸ்பாட்டிபை தான் கொண்டுள்ளது. மற்ற அனைத்து தளங்களும் ஸ்பாட்டிபை இடத்தினை பிடிக்க தான் போராடி வருகிறது. சுமார் 263 மில்லியனுக்கும் அதிகமானோர் ஸ்பாட்டிபை சந்தாதாரர்களாக உள்ளனர்.
Tencent Music: ஸ்பாட்டிபைக்கு அடுத்த படியாக உலகளவிலான ஸ்ட்ரீமிங் சந்தையில் 14.4 சதவீத பங்குடன் இரண்டாவது இடத்திலிருப்பது டென்செண்ட் மியூசிக் ஆகும். சீனா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீமிங் தளமாக டென்செண்ட் மியூசிக் விளங்குகிறது.
Apple Music: ஆப்பிள் போன் பயனர்கள் பெருமளவில் ஆப்பிள் மியூசிக் தளத்தினை தான் விரும்பி பயன்படுத்துகிறார்கள். இதனாலயே, ஸ்ட்ரீமிங் சந்தையில் 12.6 சதவீத பங்குடன் மூன்றாவது இடத்திலுள்ளது. சுமார் 93 மில்லியன் பயனர்கள் சந்தாதாரர்களாக உள்ளனர். 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் ஆப்பிள் மியூசிக் தளத்திலுள்ளது குறிப்பிடத்தக்கது.
Amazon Music: இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் அமேசான் நிறுவனம் அதன் பிரைம் மெம்பர்களுக்கு கூடுதல் சேவையாக அமேசான் மியூசிக் தளத்தினை இலவசமாக வழங்குகிறது. இதுப்போக 80 மில்லியன் பயனர்கள் சந்தாதாரர்களாக உள்ளனர். ஸ்ட்ரீமிங் சந்தையில் 11.1 சதவீத பங்குகளை தன் வசம் கொண்டுள்ளது.
YouTube Music: ஸ்ட்ரீமிங் தளத்தில் கொட்டிக்கிடக்கும் பண வாய்ப்புகளை கவனத்தில் கொண்டு யூடியூப் தளம், அதன் ஒரு பிரிவாக யூடியூப் மியூசிக் என்பதனை அறிமுகப்படுத்தியது. ஸ்ட்ரீமிங் சந்தையில் 9.7 சதவீத பங்கினை கொண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில், சுமார் 125 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டிருந்தது யூடியூப் மியூசிக் தளம்.
YouTube Music: புதிய ஆப்ஷன்கள் என்ன?
இந்நிலையில் தனது 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக, தனது பயனர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில், “Taste Match” (டேஸ்ட் மேட்ச்) என்கிற ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்பாட்டிபை தளத்திலுள்ள Spotify’s Blend ஆப்ஷனுக்கு போட்டியாக வழங்கப்பட்டுள்ளது.
இனிமேல் பயனர்கள் யூடியூப் வீடியோக்களில் கமெண்ட் செய்வது போல, இனி யூடியூப் மியூசிக் தளத்திலும் கமெண்ட் செய்யக்கூடிய ஆப்ஷன் கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதலாக, “First to Watch” and “Top Listener” போன்ற பேட்ஜ்கள் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் மியூசிக் தளத்தில் தற்போது வரை சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் இருக்கிறது. ரசிகர்கள் மற்றும் படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட 4 பில்லியனுக்கும் அதிகமான ப்ளேலிஸ்ட் யூடியூப் மியூசிக் தளத்தில் உள்ளது.
தனது பயனர்களுக்கு இசை நிகழ்ச்சி குறித்த விவரங்களை வழங்க Bandsintown- உடன் கைக்கோர்த்துள்ளது யூடியூப் செயலி. அடுத்தாண்டு, ஸ்ட்ரீமிங் சந்தையில் தன் பங்கை பன்மடங்கு உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது யூடியூப் செயலி. இவையெல்லாம் பயனர்கள் மத்தியில் வரவேற்பினை பெறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
(கட்டுரையாளர்: முத்துகிருஷ்ணன் முருகன்)
What's Your Reaction?






