தெரு நாய் வழக்கில் புதிய உத்தரவு.. ராகுல் காந்தி வரவேற்பு!
நாடு முழுவதும் பெரிதும் கவனிக்கப்பட்ட தெருநாய்க்கடி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில், ஆகஸ்ட் 11 அன்று அறிவித்த உத்தரவுகளை திருத்தி, புதிய உத்தரவுகளை வெளியிட்டுள்ளது 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு.

இந்தியா முழுவதும் தெரு நாய்க்கடி சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் தெரு நாய்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
விவாதங்களை கிளப்பிய நீதிமன்ற உத்தரவு:
இந்நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அடங்கிய அமர்வு, டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு அனைத்து பகுதிகளிலிருந்தும் தெருநாய்களை உடனடியாக அகற்றி தங்குமிடங்களுக்கு மாற்றுமாறு ஆகஸ்ட் 11ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவு நொய்டா, குருகிராம் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவித்தனர். இந்த பணியினை மேற்கொள்ள 8 வாரக்காலம் அவகாசம் வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு வழங்கிய நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள், பீட்டா போன்ற விலங்கு நல அமைப்புகள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தது. உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லியில் உள்ள இந்தியா கேட் முன் விலங்குகள் நல அமைப்பினர் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, தெருநாய்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு "கொடூரமானது" மற்றும் "குறுகிய பார்வை கொண்டது" என்று கடுமையாக சாடியிருந்தார்.
தெருநாய் விவகாரம்: புதிய உத்தரவு பிறப்பிப்பு
நாடு முழுவதும் பேசுப்பொருளாகிய இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவானது 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சிற்கு மாற்றப்பட்டது. இன்றையத் தினம், நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு,
தெரு நாய் விவகாரத்தில் பழைய உத்தரவினை திருத்தி புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
புதிய உத்தரவின் சில முக்கிய அம்சங்கள்:
1. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் அதே பகுதியில் தெரு நாய்களை விடலாம்.
2. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட அல்லது ரேபிஸ் தொற்றுக்கான அறிகுறியுடன் உள்ள நாய்கள் மற்றும் ஆக்ரோஷமான நடத்தையைக் காட்டும் நாய்கள் மீண்டும் தெருக்களில் விடப்படாது. அவை காப்பகங்களில் கண்காணிப்பில் வைக்கப்படும்.
3. ஆகஸ்ட் 11 அன்று நாய் காப்பகங்களிலிருந்து தெரு நாய்களை விடுவிக்க தடை விதிக்கப்பட்டது. அந்த உத்தரவானது தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.
4. தெருநாய்களுக்கு உணவளிக்க பிரத்யேக இடங்களை உருவாக்க நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.
5. உணவளிக்கும் பகுதிகளானது, குறிப்பிட்ட நகராட்சி வார்டில் மக்கள் தொகை, தெருநாய்களின் அடர்த்தி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நகராட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டும்.
6. பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க அனுமதிக்கப்படாது.
7. தெருநாய்களுக்கு உணவளிக்கும் பகுதிகளுக்கு அருகில், தெருநாய்களுக்கு மட்டுமே உணவளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
8. அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது தொடர்புடைய சட்டபிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்படும்.
9. இந்த விவகாரத்தின் நோக்கத்தை இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தும் வகையில், தேசிய கொள்கையை வகுப்பதற்கான பரிந்துரைகளை வழங்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி வரவேற்பு:
”தெருநாய்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை நான் வரவேற்கிறேன். இந்த அணுகுமுறை இரக்கமுள்ளதாகவும் அறிவியல் பகுத்தறிவில் வேரூன்றியதாகவும் உள்ளது” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?






