விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து

”திமுக கூட்டணியை நம்பி இருப்பதாகவும், தாங்கள் மக்களை நம்பி இருப்பதாகவும் நடிகர் விஜய் கூறிய கருத்து அரசியல் முதிர்ச்சியற்றது” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து
Manithaneya Makkal Katchi Leader Jawahirullah Criticizes Vijay statement

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு-

”நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பிரதமருக்கும், முதலமைச்சருக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் எதிராகக் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பு, விசாரணை நிலுவையில் இருக்கும் சூழலில், 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்கள் பதவி இழப்பார்கள் என்ற சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கடுமையாக இதை எதிர்த்தபோதிலும், அவர்களின் எதிர்ப்புகளையும் மீறி இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக பல்வேறு வடிவங்களில் சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. நாடாளுமன்றத்தின் மாண்புகளுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும் அது மதிப்பு கொடுப்பதில்லை. ஜனநாயகத்தின் அடித்தளத்தை தகர்க்கும் வகையில் இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். இதை வெறும் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக நம் நாட்டில் ஜனநாயக மாண்புகள் நிலைக்க வேண்டும் என்று விரும்பும் அனைவரும் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என்றார்.

பாஜக அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்:

”தேர்தல் ஆணையம் தற்போது பீகார் மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நாட்டின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதை கண்கூடாகப் பார்த்தோம். அடுத்ததாக, தமிழ்நாட்டிலும் இந்த சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். 

திராவிட முன்னேற்றக் கழக அரசு இதுபோன்ற தகிடுதத்தங்களை முறியடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும், தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதன் காரணமாக, திமுக அரசு கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

விஜய்யின் பேச்சு முதிர்ச்சியற்றது:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜவாஹிருல்லா, "அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையாத ஒரு கருத்தை அவர் கூறி இருக்கிறார் என்பதற்கு இந்தப் பேச்சே ஒரு ஆதாரமாக இருக்கிறது. திமுக கூட்டணியை நம்பி இருக்கிறது, நாங்கள் மக்களை நம்பி இருக்கின்றோம் என்று சொல்வது ஒரு அரசியல் முதிர்ச்சியற்ற கருத்து. கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சிக்கு வருவது என்பது எல்லா கட்சிகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. இதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் தில்லுமுல்லு செய்தால் ஒழிய தமிழ்நாட்டில் பாஜக கால் பதிக்க முடியாது. எனவே, தமிழ்நாடு இந்த சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை ஒட்டுமொத்தமாக கடுமையாக எதிர்க்க வேண்டும்" என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow