மழைக்கு ரெடியா ? குடைய எடுத்துக்கோங்க ! வானிலை மையம் அப்டேட் !
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், கனமழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று (அக்.5) பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை நிலவரம் :
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளின் மேல் சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்துடன், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் இருந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் வரையிலும் வடதமிழ்நாடு மற்றும் வடகேரளம் வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டல நிலைத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு, அடுத்த சில நாட்களில் ஆங்காங்கே மழை பெய்யும் சூழல் காணப்படுகிறது.
இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :
இன்று (அக்.5) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தப் பகுதிகளில் மழையுடன் இடி, மின்னல் ஏற்படுவதுடன், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் மிதமான மழை :
திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஆங்காங்கே இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் லேசான மழை :
தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். எனவே, மழை வாய்ப்புள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் வானிலை மாற்றங்களை கவனித்து பயணங்களைத் திட்டமிடுவது அவசியமாகும்.
வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை :
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
இன்று முதல் வரும் நாட்களில் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானிலை :
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.
பொதுமக்களுக்கு அறிவுரை :
மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதுடன், இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் உள்ளூர் வானிலை நிலவரத்தை கவனித்து செயல்படுவது பாதுகாப்பானதாக இருக்கும்.
What's Your Reaction?

