இன்றைய ஸ்டைலுக்கு மாறவில்லையென்றால் நிற்க முடியாது.. இசையமைப்பாளர் ருசிகர பேச்சு
இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் 1995-ஆம் ஆண்டு வெளியான 'ஆசை' திரைப்படத்திற்கு பிறகு தமது ஸ்டைலை மாற்றிக் கொண்டதாக இசையமைப்பாளர் தேவா கூறியிருப்பது ருசிகரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை குன்றத்தூர் அருகே கோவூரில் உள்ள தனியார் பள்ளியில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் தேவா, இசை நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை பாராட்டி பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் தற்போது 4 படங்களுக்கு இசை அமைத்து வருவதாக கூறினார். காலத்திற்கு ஏற்ப ஸ்டைலை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் சினிமா துறையில் நிற்க முடியாது என்றார். இதை உணர்ந்து, 1995-ஆம் ஆண்டு வெளியான ஆசை படத்தில் தமது ஸ்டைலை மாற்றிக் கொண்டதாகவும், இதனால் ரசிகர்கள் மத்தியில் தமக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்ததாகவும் தெரிவித்தார். இன்றைய ஸ்டைலுக்கு ஏற்ப மாறவில்லை என்றால் சினிமா துறையில் நிற்க முடியாது என்றும் அப்போது அவர் கூறினார்.
படத்தில் நடிக்க ஏதாவது அழைப்பு வந்ததா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு தனுஷ் படத்தில் வில்லனாக நடிக்க அழைப்பு வந்ததாக கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். தமக்கு சென்னை பாசை நன்றாக வரும் என்பதால், ஆனால் அந்த வாய்ப்பை தாம் ஏற்கவில்லை என்றும், தேவா விளக்கம் அளித்தார். "தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்" என்ற கூற்றுக்கு ஏற்ப வாழ்ந்திட வேண்டுமென்றும் தேவா பதிலளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
What's Your Reaction?