விதியை மீறுகிறாரா ஆற்றல் அசோக்குமார்..? திமுக எம்.பி வேட்பாளர் குற்றச்சாட்டு !
அசோக்குமார் அதிமுக வேட்பாளராக இருந்தாலும் அவர் பாஜக பிரமுகராகவே மக்கள் மத்தியில் கருதப்படுகிறார்- திமுக எம்.பி
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பல்வேறு தேர்தல் விதிமீறல்களில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் ஈடுபட்டு வருவதாக திமுக வேட்பாளர் பிரகாஷ் குற்றம்சாட்டியுள்ள நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷ், ஆணைக்கல்பாளையம், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைத்தால், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு, மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய் என ஐந்து ஆண்டுகளுக்கு 5 லட்ச ரூபாய் தரப்படும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக மாற்றப்படுவதோடு நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் கூலித்தொகை வழங்கப்படும், 500 ரூபாய்க்கு சிலிண்டர் - 75 ரூபாய்க்கு பெட்ரோல் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானி அருகில் சேலை பண்டல்கள் பிடிக்கப்பட்டது - அவை அனைத்தும் ஆற்றல் அசோக்குமாருடையது என குற்றம்சாட்டினார். அத்துடன் அசோக்குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினார். மேலும், அசோக்குமார் அதிமுக வேட்பாளராக இருந்தாலும் அவர் பாஜக பிரமுகராகவே மக்கள் மத்தியில் கருதப்படுவதாக கூறிய பிரகாஷ், எடப்பாடி பழனிச்சாமியை ஏமாற்றும் வேட்பாளரை அவரே நியமித்துள்ளதாகவும் விமர்சித்தார்.
What's Your Reaction?