தேமுதிகவை தொடர்ந்து திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி
திமுக கூட்டணியில் நேற்றைய தினம் தேமுதிக இணைந்துள்ள நிலையில், எஸ்டிபிஐ கட்சியும் விரைவில் இந்த கூட்டணியில் இணையவுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து எஸ்டிபிஐ நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்: வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை பலப்படுத்த நிர்வாக வசதிக்காக 38 வருவாய் மாவட்டங்களை 62 மாவட்ட நிர்வாகங்களாகப் பிரித்துள்ளோம். தற்போது வரை 22,000 பூத்களுக்கான பொறுப்பாளர்களை நியமித்து உள்ளோம்.
ராமநாதபுரம், தென்காசி, தஞ்சாவூர் மற்றும் நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பிரம்மாண்டமான பூத் கமிட்டி மாநாடுகளை எஸ்டிபிஐ நடத்தியுள்ளது. கோவை, சென்னை, மதுரை, திருவாரூர் என மண்டல வாரியாக பூத் பொறுப்பாளர்கள் மாநாடுகளை நடத்தி உள்ளோம்.
மதுரை மகளிரணி மாநாடும், புதுக்கோட்டை ஐ.டி. விங் மாநாடும் நடத்தி உள்ளோம். கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 0.70% வாக்குகளைப் பெற்றோம்.கோவை மாநகராட்சி உட்பட கடையநல்லூர், கீழக்கரை, குளச்சல் என 10 நகராட்சிகளிலும், 25 பேரூராட்சிகளிலும் எஸ்டிபிஐ கவுன்சிலர்கள் இன்று மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
160 இடங்கள், 3 ஊராட்சித் தலைவர்கள், 6 துணைத் தலைவர்கள் மற்றும் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் என ஊரகப் பகுதிகளிலும் தடம்பதித்துள்ளோம். இந்த தகவல்களை எல்லாம் ஆளும் திமுகவுக்கு அவர்களது தேர்தல் வியூகம் நிறுவனம் ரிப்போர்ட்டாக அளித்துள்ளது.
இதன் அடிப்படையில் தான் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் சேர எஸ்டிபிஐ பேச்சுவார்த்தை அழைத்தனர். 5 தொகுதிகள் வரை எங்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். என்றார்.
ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி வரிசையில் எஸ்டிபிஐ திமுகவில் இணையும் என தெரிகிறது.
What's Your Reaction?

