தீவிரமடையும் அக்வான் புயல்...மக்களே உஷார்...இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

வங்கக்கடலில் உருவான அக்வான் தீவிர புயல் இன்று நண்பகலில் ஆந்திரா – ஒடிசா கடற்கரை இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Nov 20, 2026 - 10:11
தீவிரமடையும் அக்வான் புயல்...மக்களே உஷார்...இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

வங்கக்கடலில் உருவான அக்வான் (Akvan) தீவிர புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் இன்று (நவம்பர் 20) நண்பகலில் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைக்கு இடையே கோபால்பூர் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நேற்று (நவம்பர் 19) காலை 8.30 மணியளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய இந்தப் புயல், தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையைக் கடந்த பின்னர் காற்றின் வேகம் படிப்படியாகக் குறையக்கூடும்.

இதற்கிடையே, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு லட்சத்தீவுப் பகுதிகளில் சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

இந்த வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று (நவம்பர் 20) தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையில், பொதுவாக வறண்ட வானிலை நிலவும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அக்வான் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow