விஜய் அரசுக்கு குறி வைக்கும் அமித்ஷா...ஆளுநர் கொடுத்த 3 ஃபைல்கள்! டிசம்பர் 5-க்கு பிறகு அதிரடி?

தமிழக ஆளுநர் அர்லேகர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தபோது, கரூர் சம்பவம், குதிரை பேர புகார், பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்பான சர்ச்சை உள்ளிட்ட மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து அறிக்கைகளை வழங்கியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Nov 22, 2026 - 09:00
விஜய் அரசுக்கு குறி வைக்கும் அமித்ஷா...ஆளுநர் கொடுத்த 3 ஃபைல்கள்! டிசம்பர் 5-க்கு பிறகு அதிரடி?

க டந்த தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, ஐந்தாண்டுகளும் தி.மு.க. அரசை பாடாய்படுத்திவிட்டார். இப்போது சூழல் அப்படி இல்லை. விஜய் அரசும் ஆளுநர் தரப்பும் இணக்கமாகத்தான் இருக்கின்றன. அதிலும், விஜய் மீது ஆளுநருக்கு நல்ல அபிப்பிராயம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. ஆனாலும், பிரச்னை என்று வந்துவிட்டால், சும்மா விடாது மத்திய அரசு. அப்படித்தான், டெல்லியிலிருந்து வந்த திடீர் அழைப்பைத் தொடர்ந்து புறப்பட்ட ஆளுநர் அர்லேகர், அமித்ஷாவை சந்தித்து, த.வெ.க. அரசுக்கு எதிரான மூன்று ஃபைல்களைக் கொடுத்து, அதிரடியை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இந்த சூறாவளியில் த.வெ.க. அரசு எந்தளவுக்கு தாக்குப்பிடிக்கும் என்பதே அடுத்தடுத்த மாதங்களில் அரங்கேறவிருக்கும் அனல் பறக்கும் அரசியல் ட்விஸ்ட்!

தமிழக ஆளுநர் அர்லேகர் அமைச்சர் அமித்ஷா இடையிலான சந்திப்பில் நடந்தவை குறித்து டெல்லி அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் விசாரித்தோம். "மாநில கவர்னர்கள் மத்திய உள்துறை அமைச்சரை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், தமிழக கவர்னரை அமித்ஷா திடீரென வரச்சொல்லி இருப்பதுதான் இங்கு ஹைலைட் நவம்பர் 13 அன்று டெல்லி பயணமான ஆளுநர் அர்லேகர், காலை 11.30 அளவில் அமித்ஷாவை சந்தித்தார்.

சுமார் 90 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், த.வெ.க. ஆட்சியமைக்கும்போது நடந்த களேபரங்கள், அதன்பிறகு நடைபெற்ற குதிரைபேர விவகாரங்கள் தொடங்கி, சமீபத்தில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி பெண் ஐ.ஏ.எஸ். விவகாரம், துணை சபாநாயகர் அடாவடி, மின்சாரம் மற்றும் உயர்கல்வி ஆகிய துறைகளின் செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கு என ஒட்டுமொத்தமாக த.வெ.க. அரசின் ஆறு மாத செயல்பாடுகளை அமித்ஷாவிடம் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார் கவர்னர் அர்லேகர்.

கரூர் சம்பவம் கணக்கு என்ன?

மேலும், முக்கியமான மூன்று ஃபைல்களையும் அமித்ஷாவிடம் வழங்கியிருக்கிறார் அர்லேகர். முதல் ஃபைல் கரூர் துயரச் சம்பவம் குறித்தது. விஜய்யைக் காணத்தான் கூட்டம் வந்தது என்பதால், அவரும் இதற்கு பொறுப்பேற்கும் வகையில் முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயரைச் சேர்க்க வேண்டுமென வி.சி.க. தலைவர் திருமாவளவன் அப்போதே குறிப்பிட்டார். ஆனால், தி.மு.க. அரசு அதைச் செய்யவில்லை. எனினும், விசாரணை அமைப்பான சி.பி.ஐ. நினைத்தால், அதாவது அமித் ஷா நினைத்தால் விஜய் பெயரை சேர்க்க முடியும்.

இதில் சில சட்டச் சிக்கல்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. அதாவது, குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரைச் சேர்த்து ஏ1 என்று குறிப்பிட்டால், இது ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்கிறார்கள். இனி மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஏன் பிரதமரே கலந்துகொள்ளும் ஒரு நிகழ்வில் கரூர் போன்ற துயரச் சம்பவம் நிகழ்ந்தால், அதில் கலந்துகொண்ட வி.வி.ஐ.பி. பெயரையும் சேர்க்க நேரிடும். அதனால், 'சம்பவம் நடந்த இடத்தில் விஜய் இருந்தார்' என்றளவில் வேண்டுமானால் விஜய் பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்க்கலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதைப்பற்றிய விவாதம் இந்த சந்திப்பில் நீடித்திருக்கிறது.

குதிரை பேர வழக்கில் குறி யாருக்கு?

த.வெ.க. ஆட்சியமைக்க குதிரை பேரம் நடத்தியதாக அமமு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கவர்னரிடம் அளித்த புகாரையும் தூசி தட்டச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா. அதாவது, மன்னார்குடி தொகுதியின் அ.ம.மு.க. எம்.எல்.ஏ.வான காமராஜை, கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் ஒப்புதலின்றி சந்தித்துப் பேசி, த.வெ.க. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஆதரவளிக்க வைத்தது த.வெ.கழகம். இதையடுத்து, தன் கட்சி எம்.எல்.ஏ.வை குதிரை பேரம் நடத்தி தவெ.க.வினர் தூக்கிவிட்டதாக ஆளுநர் அர்லேகரிடம் இரண்டு முறை புகார் கொடுத்திருந்தார் தினகரன். அதில், 'த.வெ.க.விற்கு ஆதரவு அளிப்பதாக காமராஜால் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் போலியானது' என்றும், 'அதுகுறித்து வீடியோவும் இருப்பதால் விசாரணை நடத்த வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தவிர, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காமராஜுக்கு தவெ.க. அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், குதிரை பேர விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி நீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் தினகரன் எச்சரித்திருந்தார்.

ஆளுநரிடம் அதேபோல், அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அளித்த புகாரில், 'த.வெ.க. அமைச்சர்கள் குதிரை பேரத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினர். அ.தி.மு.க.விலிருந்து மேலும் 15 எம்.எல்.ஏ.க்கள் தவெ.க.வை நோக்கி வருவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் செயல்' என குறிப்பிட்டிருந்தார். இதுபற்றியும் அர்லேகர் அமித் ஷாவிடம் விரிவாக  எடுத்துப் பேசியிருக்கிறார்.

பெண் ஐ.ஏ.எஸ். விவகாரம்

தொடர்ந்து, அர்லேகர் அமித்ஷா உரையாடல், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கு விரும்பத்தகாத மெசேஜ் அனுப்பியது குறித்து எட்டியிருக்கிறது. சொல்லப்போனால், இந்த விவகாரத்துக்காகத்தான் அமித்ஷா, ஆளுநரை டெல்லிக்கு அழைத்ததாகவும் சொல்கிறார்கள். அதாவது, இந்த விவகாரம் ஊதிப் பெரிதாக்கப்படுவதை விரும்பாத தவெ.கவில் சில புள்ளிகள், 'இவை அனைத்தும் வதந்தி' என மறுக்க சொல்லி கலெக்டர் தரப்புக்கு மறைமுக அழுத்தம் தருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அரசு நிகழ்ச்சிகள் சிலவற்றை புறக்கணித்துவரும் ஆட்சியர் பத்மஜா, தவிர்க்க முடியாத அரசு நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்றுவிட்டு ஊடகங்களை சந்திக்காமல் கிளம்பிவிடுகிறார்.

இதற்கிடையே, தலைமைச் செயலாளரிடம் பத்மஜாவின் கணவரும், விழுப்புரம் கலெக்டருமான ஷேக் அப்துல் ரஹ்மான் புகார் அனுப்பியிருந்தார். அந்த அறிக்கையை தலைமைச் செயலாளர் சாய்குமார் சம்பிரதாயப்படி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார். இந்த நிலையில் அமித்ஷாவுடனான சந்திப்பின்போது, ஆளுநரும் இதுகுறித்த ஒரு ஃபைலை கொடுத்து, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமித் ஷாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். 

இதைத் தொடர்ந்து, மேலும் சில விஷயங்கள் குறித்தும் அமித்ஷாவிடம் ஆளுநர் அர்லேகர் பேசியிருக்கிறார். குறிப்பாக, சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்த அறிக்கையைக் கொடுத்த அர்லேகர், 'கைதிகள் தப்பித்த சம்பவங்கள், தீபாவளி நாட்களில் நடந்த கொலைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும், ஆளுநர் சென்னையிலிருந்து புறப்படும் முன்பாக கடைசியாக அவருக்குக் கிடைத்த தகவலான, த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தலா பத்து 'லட்டுகள் கொடுத்த விவகாரத்தையும் அமித்ஷா காதில் ஓதியிருக்கிறார் என சொல்லப்படுகிறது.

டிசம்பர் 5க்கு பிறகு?

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அமித்ஷா, அவர் சில விஷயங்களை அர்லேகரிடம் பகிர்ந்திருக்கிறார். அதாவது, உயர் கல்வித்துறையில் ஊழல்கள் நடப்பதாக  தனக்கு தகவல் வந்திருப்பதாகவும், துணை வேந்தர்கள் இல்லாமல் 15க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இருப்பதால், தற்காலிக துணை வேந்தர்களை நியமிக்கும் விஷயத்தில் முறைகேடுகள் நடப்பதாகவும் அமித்ஷா சொன்னதாக கூறப்படுகிறது. இவை குறித்தும், சென்னை பல்கலைக்கழகத்தில் கிறித்தவ மத சம்பந்தப்பட்ட படிப்பு ஒன்றைத் தொடங்கவிருப்பது குறித்தும் விரிவான அறிக்கையை அர்லேகரிடம் கேட்டிருக்கிறார் எனவும் தெரிகிறது.

தவிர, அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி, நிர்வாகிகளும் தொடர்ச்சியாக த.வெ.க.வுக்குச் செல்கிறார்கள். அவர்களை வளைக்கும் அளவுக்கு த.வெ.கவின் சோர்ஸ் ஆஃப் இன்கம் என்ன? என்று கேட்ட அமித் ஷா, எம்.எல்.ஏக்களுக்கு தலா பத்து 'லட்டு' கொடுக்கும் அளவுக்கு எங்கிருந்து அவர்களுக்கு வைட்டமின்கள் கிடைக்கின்றன என்ற விவரத்தையும் விரிவான அறிக்கையாக அர்லேகரிடம் கேட்டிருக்கிறார். இறுதியாக 'அமித் ஷா, வரும் டிசம்பர் 5ம் தேதிக்கு பிறகு முக்கிய நடவடிக்கை தொடங்கும்' என்று சொல்லியிருக்கிறார்.

3 ஃபைல்கள்!

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, துறை ரீதியான ஊழல்கள் போன்றவற்றை அர்லேகர் விவரிக்கும்போது அமைதியாக இருந்த அமித் ஷா, பெண் கலெக்டர் விவகாரத்தையும், அ.ம.மு.க. எம்.எல்.ஏ.வை குதிரை பேரத்தில் இழுத்த விவகாரத்தையும்தான் கூர்ந்து கேட்டிருக்கிறார். கரூர் வழக்கு, குதிரை பேர விவகாரம் மற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதான த.வெ.க. எம்.எல்.ஏ.வின் அநாகரிக விவகாரம் ஆகிய மூன்று ஃபைல்களையும் தனியே வழங்கியிருக்கிறார் கவர்னர் அர்லேகர். இந்த ஃபைல்களை ஓபன் செய்து, அதுகுறித்து முதற்கட்ட ஆய்வை மேற்கொண்டு, தனக்கு அறிக்கை அளிக்குமாறு மத்திய உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் அமித்ஷா.

'காங்கிரஸ் முக்த் பாரத்' என்கிற பேரில் காங்கிரஸை நாட்டிலிருந்தே வேரறுக்க காய்நகர்த்தி வருகிறது பா.ஜ.க. ஆனால், தென் மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் ஓரளவு காலூன்றி இருக்கிறது. கர்நாடகம், தெலங்கானா மாநிலங்களில்கூட அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸை சாய்த்துவிடலாம் என்ற நம்பிக்கை பா.ஜ.கவுக்கு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் ஏதோ ஒரு ரூட்டில் வளர்வதற்கு முன்பு தி.மு.க.வும், தற்போது த.வெ.க.வும் அடித்தளம் போட்டுக்கொண்டிருப்பதை அமித் ஷா விரும்பவில்லை. இதனால், காங்கிரஸை கழற்றிவிட வேண்டுமென முன்பு தி.மு.க.விடம் வலியுறுத்திய பா.ஜ.க, தற்போது கிடைத்திருக்கும். ஆதாரங்களைக்கொண்டு த.வெ.க.வை மிரட்டுவதற்கும் தயாராகி வருகிறது.

தாக்குப்பிடிக்குமா த.வெ.க. அரசு?

இதன்படி பார்த்தால், மேற்கண்ட மூன்று விவகாரங்களையும் த.வெ.க.வுக்கு எதிரான ட்ரம்ப் கார்டாக பயன்படுத்த நினைக்கிறது பா.ஜ.க. விஜய்யை கரூர் சம்பவத்தில் சிக்கவைக்க ஏதேனும் வழி இருக்கிறதா என பா.ஜ.க. அலசுகிறது. 2024ல் ஐதராபாத்தில் 'புஷ்பா 2' பட சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது ஏற்பட்டக் கூட்ட நெரிசலில் ஒரு ரசிகை இறந்த சம்பவத்தில், அல்லு அர்ஜுனை முதல் குற்றவாளியாக சேர்த்து கைதும் செய்தது தெலங்கானா அரசு. இதே ரூட்டில், கரூர் விவகாரத்தை அணுகலாமா என சட்டரீதியான விவாதம் டெல்லியில் தீவிரமாக நடந்து வருகிறது.

அடுத்ததாக, 'குதிரை பேர விவகாரத்தில் டி.டி.வி. தினகரனின் புகாரை வைத்து நடவடிக்கை மேற்கொண்டால் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் சிக்குவார்கள்' என்றும், 'இதற்கு அமித் ஷா கிரீன் சிக்னல் கொடுத்தால் போதும்' என்றும் கவர்னர் அர்லேகர் தெரிவித்திருப்பதால், இது இரண்டாவது அடியாக இருக்கும்.

இறுதியாக மற்றும் முக்கியமாக, பெண் ஐ.ஏ.எஸ். விவகாரத்தையும் கையில் எடுக்க அமித்ஷா முடிவெடுத்துவிட்டதாகவே டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அனுப்பிய புகார்களை விரிவான சட்ட ஆலோசனைக்கு அனுப்பியிருக்கிறாராம் அமித்ஷா. 'சட்ட அமைச்சகத்தின் விளக்கம் பெறப்பட்டதும், அந்த எம்.எல்.ஏ. மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு பகிரங்கமாகவோ, தனிப்பட்ட முறையில் தமிழக அரசிடமோ அறிவிக்கும்' என்கிறார்கள். இது மூன்றாவது அடியாக இருக்கப்போகிறது.

இதைத்தொடர்ந்து, 'பா.ஜ.க.வுக்கு இனி விஜய் ஒத்துழைப்புத் தர மறுத்தால், மூன்று ஃபைல்களில் இருக்கும் விவகாரங்கள் சட்டப்படி வேகப்படுத்தப்படும்' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதனால் த.வெ.க. அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும் வருங்காலம் கலக்கம் தரக்கூடியதாகவே இருக்கும். இப்படியான, பா.ஜ.க.வின் அஸ்திரங்களுக்கு தி.மு.க, காங்கிரஸ் போன்ற சீனியர் கட்சிகளே திணறும் வேளையில், த.வெ.க. அரசு என்ன செய்யப்போகிறது என்பது போகப்போகத்தான் தெரியும்" என்று விரிவாக சொல்லி முடித்தனர்.

அவர்கள் நினைப்பது நடக்காது!

இதுகுறித்து எல்லாம் த.வெ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டிடம் கேட்டோம். "எங்கள் ஆட்சியை ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் எதிரணியினர் தீவிரமாக இருக்கிறார்கள். இன்னும்கூட நிறைய செய்வார்கள். எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஆனால், அவர்கள் நினைப்பது நடக்காது. ஏமாற்றம்தான் கிடைக்கும்" என்றார்.

பா.ஜ.க. மாநிலத் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டபோது, "யூகமான கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல முடியாது. தமிழக ஆளுநர், பணி நிமித்தமாக மத்திய அமைச்சர்களை, குடியரசுத் தலைவரை சந்திப்பது வழக்கமானது. அதை அரசியலாக்குவது தவறு. ஆனால், சட்டம் ஒழுங்கு சீர்கேடு இதுவரை தமிழகத்தில் இல்லாத அளவுக்கு மோசமாகியிருப்பது உண்மை. அதில், இந்த அரசு மிக மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. நடவடிக்கை எடுக்கவேண்டிய முதலமைச்சர் மிக அமைதியாக இருக்கிறார்" என்றார்.

அரசியலின் ஆழம் பார்க்க தயாராகிறது தவெ.க.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow