ஆங்கிலேயருக்கு எதிராக மிகப்பெரிய புரட்சி நடந்த இடம்.. மீண்டும் ஒரு வரலாறு படைக்கும்.. வேலூரில் மோடி பேச்சு
ஆங்கிலேயருக்கு எதிராக மிகப்பெரிய புரட்சி வேலூரில் நடந்துள்ளது. மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வு வேலூரில் நடைபெறும் என்று பிரதமர் மோடி உறுதியாக கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய(09.04.24) தினம் சென்னை வந்திருந்தார். நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள பாண்டி பஜாரில், பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரோடு ஷோவில் பங்கேற்று, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, 2ஆம் நாளான இன்று(10.04.24), தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக, பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் சென்று, கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
சகோதர சகோதரிகளே.. இந்த தமிழ் புத்தாண்டு மிகப்பெரிய மாற்றத்தை உங்களுக்கு தரப்போகிறது என தொடங்கி, நண்பர்களே உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் எனக்கு இருக்கிறது என கூறினார். இந்த தமிழ் மக்களுக்காக எனது முழு திறமையை நான் பயன்படுத்துவேன், இது எழுச்சி மிகு கூட்டம், உங்களிடம் தமிழில் உரையாற்ற முடியாமல் இருப்பதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என கூறினார்.
துணிச்சலுக்கும் வீரத்திற்கும் பேர் போன நகரம் வேலூர். ஜலகண்டேஸ்வரர், முருகப்பெருமானை வணங்குகிறேன் என கூறிய மோடி, இது மிகப்பெரிய புரட்சி மண், ஆங்கிலேயருக்கு எதிராக மிகப்பெரிய புரட்சி வேலூரில் நடந்துள்ளது. மீண்டும் ஒரு மிகப்பெரிய மாற்றம் வேலூரில் நடைபெற உள்ளது. மீண்டும் மோடி அரசு வரும் என்று உறுதிபட தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சி செய்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தியாவில் மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்துள்ளதாகவும், 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக நாட்டை ஆண்டவர்கள் ஊழல் செய்தவர்களாக இருந்தனர் என்றும் குற்றம்சாட்டினார்.
இந்தியா தற்போது மிகப்பெரிய வல்லரசாக மாறிக்கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், வேலூரில் விமான நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் உறுதி அளித்தார்.
வளர்ந்த இந்தியாவை தமிழ்நாடு வழிநடத்தும் நேரமிது, தமிழ்நாட்டை வழிநடத்தும் திமுக பின்னோக்கி இழுத்து செல்கிறது என்று விமர்சித்த அவர், திமுக குடும்ப அரசியலால் இளைஞர்கள் முன்னேற முடியாமல் இருக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
ஊழலுக்கு முதல் காபி ரைட் உரிமையை திமுக வைத்துள்ளது என்றும் ஒட்டு மொத்த குடும்பமும் தமிழ்நாட்டை கொள்ளையடிக்கின்றனர் என்றம் அவர் சாடினார். மணல் கொள்ளையர்கள் ரூ.4000 ஆயிரம் கோடியை கொள்ளையடித்து, தமிழ்நாட்டிற்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர் என்றும், தமிழ்நாட்டின் வளர்ச்சிகாக மத்திய அரசு பணம் ஒதுக்கினாலும், திமுக அரசு ஊழல் செய்து பணத்தை ஒதுக்கி வருவதாக கூறினார்.
அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் சிறு குழந்தைகள்கூட போதை பொருளுக்கு அடிமையாகும் சூழ்நிலை உள்ளதாக வேதனை தெரிவித்த அவர், போதை கடத்தல் மாபியாக்களுக்கு தலைவன் எந்த குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறான் தெரியுமா? என கேள்வி எழுப்பினார். மேலும், அனைத்தையும் ஒழிப்போம் என்று பிரதமர் மோடி சூளுரைத்தார்.
திமுக எப்போதும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது, தமிழ்நாட்டு மக்களை மொழி, ஜாதியின் பெயரால் பிரிக்க நினைக்கின்றனர் என குற்றம்சாட்டிய மோடி, பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொண்டால், திமுக செல்லாக்காசு ஆகி விடும் என கூறினார். 50 ஆண்டு காலமாக திமுக மோசமான ஆபத்தான அரசியல் செய்து வருவதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
What's Your Reaction?