அனிருத் - காவ்யா தம்பதிக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி என்ன சொல்லிருக்காங்க தெரியுமா ?

பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி என நாட்டின் இரு முக்கியத் தலைவர்கள் அனிருத் – காவியா மாறன் தம்பதிக்கு வாழ்த்து மடல் அனுப்பியுள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Nov 21, 2026 - 18:35
அனிருத் - காவ்யா தம்பதிக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி என்ன சொல்லிருக்காங்க தெரியுமா ?
PM Modi and Sonia Gandhi Wishes Anirudh - Kavya !

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் – காவியா கலாநிதி மாறன் திருமணத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகிய இருவரும் வாழ்த்து கடிதங்களை அனுப்பியுள்ளனர். நாட்டின் இரண்டு முக்கிய அரசியல் தலைவர்கள் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்!

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறன் ஆகியோரின் திருமணம் கடந்த நவம்பர் 11-ம் தேதி கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு!

கிரீஸில் திருமணம் நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று (நவம்பர் 21) சென்னையில் அனிருத் – காவியா மாறன் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துக் கடிதம்!

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி புதுமணத் தம்பதிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் ஆகியோருக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், காவியா மற்றும் அனிருத் தங்களது வாழ்க்கையில் நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் அன்புடன் புதிய பயணத்தைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தம்பதியினர் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் அன்பையும் பாசத்தையும் வளர்த்துக்கொண்டு, நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றும், குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்விற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

தங்களது திருமண விழாவிற்கு அழைப்பு விடுத்ததற்காகவும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தியும் வாழ்த்து மடல்!

அதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சோனியா காந்தியும் அனிருத் – காவியா மாறன் தம்பதிக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், காவியாவின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் குடும்பத்தினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

காவியா – அனிருத் தம்பதியினர் தங்களது வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் பலமாகவும், சிறந்த நண்பர்களாகவும், அன்பைப் பகிர்ந்துகொள்பவர்களாகவும் இருந்து, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என சோனியா காந்தி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆசீர்வாதங்களுடன் இந்தத் திருமணக் கொண்டாட்டங்கள் சிறப்பாக அமையும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துகளைப் பொழிந்த தேசத்தின் இரண்டு முக்கியத் தலைவர்கள்!

அனிருத் – காவியா மாறன் திருமணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் சோனியா காந்தி ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

ஒருபுறம் பிரதமர் மோடியும், மறுபுறம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் புதுமணத் தம்பதிக்கு அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த இல்லற வாழ்க்கை அமைய வாழ்த்தியிருப்பது இந்தத் திருமண நிகழ்வுக்கு மேலும் முக்கியத்துவம் சேர்த்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow