வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி... மழை தொடருமா?
வங்கக்கடலில் நவம்பர் 30-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. வட மற்றும் தென் மாவட்ங்களின் சில பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
வரும் நவம்பர் 29-ஆம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி உருவாகும் எனவும், அது 30-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருமாறி, டிசம்பர் 2-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை குமரிக்கடல் பகுதியிலிருந்து தமிழ்நாடு மற்றும் கேரளம் வழியாகத் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடையில் கடுமையான வெப்பம் நிலவியது.வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையிலும், போதுமான மழை கிடைக்காதது மக்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது. காலை நேரத்தில் குளிர் நிலவியது.
இந்த நிலையில், மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.வட தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. சென்னையில் விட்டுவிட்டுப் பெய்து வந்த மழை நேற்று ஓய்ந்தது. இந்த ஆண்டு போதுமான மழை கிடைக்காததால் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புறங்களுக்குக் குடிநீர் வழங்கும் நீர்நிலைகளிலும் நீர்மட்டம் குறைவாகவே உள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு போதுமானதாக இல்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
What's Your Reaction?