சீட் கேட்ட டைரக்டர் நானா? வைரல் நியூஸ்க்கு லோகேஷ் பதில்..!

விஜய்யிடம் தேர்தலில் போட்டியிட சீட் கேட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்ற தகவல் பரவிய நிலையில், புஸ்ஸி ஆனந்த் கூறிய கருத்து குறித்து லோகேஷ் அளித்துள்ள பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aug 21, 2026 - 17:45
சீட் கேட்ட டைரக்டர் நானா? வைரல் நியூஸ்க்கு லோகேஷ் பதில்..!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சந்தித்த பிரபல இயக்குநர் ஒருவர், தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட தொகுதியில் தனக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த இயக்குநரின் பெயரை புஸ்ஸி ஆனந்த் வெளிப்படையாக குறிப்பிடவில்லை. கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்து வரும் மாவட்டச் செயலாளரை புறக்கணித்துவிட்டு, வெளியில் இருந்து வந்தவருக்கு அந்த தொகுதியை வழங்க முடியாது என விஜய் தெரிவித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து, விஜய்யுடன் இணைந்து மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் அந்த பிரபல இயக்குநராக இருக்கலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

குறிப்பாக, அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசியபோது, தவெகவைச் சேர்ந்த அமைச்சர் வினோத் அருகில் இருந்த எம்.எல்.ஏ. விக்னேஷை சுட்டிக்காட்டியதாக கூறப்பட்ட சம்பவமும் இந்த விவாதத்துடன் இணைக்கப்பட்டது. விக்னேஷ் கிணத்துக்கடவு தொகுதியின் எம்.எல்.ஏ. என்பதால், லோகேஷ் கனகராஜின் சொந்த ஊரும் கிணத்துக்கடவு என்ற தகவலை வைத்து நெட்டிசன்கள் பல்வேறு யூகங்களை முன்வைத்தனர்.

இதனால், “விஜய்யிடம் தேர்தலில் போட்டியிட சீட் கேட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தானா?” என்ற கேள்வி இணையத்தில் பேசுபொருளானது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் ஏன் அதை கேட்க வேண்டும். அமைச்சர் ஆனந்த் குறிப்பிட்ட நபர் நான் இல்லை. வேறு யாராவது இருக்கலாம்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் மூலம் சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு லோகேஷ் கனகராஜே நேரடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்ட அந்த “பிரபல இயக்குநர்” யார் என்ற கேள்வி தற்போது மீண்டும் எழுந்துள்ளது.

லோகேஷ் கனகராஜின் விளக்கத்தைத் தொடர்ந்து, அமைச்சர் கூறிய தகவலுடன் தொடர்புடைய அந்த இயக்குநர் யார் என்பதை அறிய அரசியல் வட்டாரத்திலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow