BIGBOSS முத்துக்குமரன் மீது FIR! எனக்கு நியாயம் வேண்டும் என கோர்ட் படியேறிய வஹிதா !
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மீது வஹிதா அக்தர் அளித்த புகாரின் அடிப்படையில் BNS பிரிவு 69-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் திருப்பங்கள் என்ன என்ற கேள்விகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் முத்துக்குமரனைச் சுற்றிய சர்ச்சை தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக இன்ஸ்டாகிராம் பிரபலமான வஹிதா அக்தர் அளித்த புகாரின் அடிப்படையில், முத்துக்குமரன் மீது சென்னை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். BNS பிரிவு 69-ன் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நட்பாகத் தொடங்கிய பழக்கம்... திருமண வாக்குறுதியால் சர்ச்சை!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் முத்துக்குமரன். இவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான வஹிதா அக்தருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் நெருக்கமான உறவாக மாறியதாகவும், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக முத்துக்குமரன் உறுதியளித்ததாகவும் வஹிதா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், திருமணம் தொடர்பாக முத்துக்குமரன் உரிய முடிவெடுக்காமல் தன்னை ஏமாற்றிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் இந்த விவகாரம் தொடர்பாக வஹிதா வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. இந்தப் பிரச்னையால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தற்கொலைக்கு முயன்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
வழக்குப்பதிவு செய்ய மாட்டேன் என்றவர்... காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
ஆரம்பத்தில் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்ததாகக் கூறப்படும் வஹிதா, கடந்த சில நாட்களாக இந்த விவகாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். காவல்துறையினரைச் சந்திப்பது, வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெறுவது என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த நவம்பர் 16-ஆம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்ற வஹிதா, முத்துக்குமரன் மீது ஆதாரங்களுடன் புகார் மனு அளித்துள்ளார். தன்னைத் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ முத்துக்குமரன் சம்மதிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
BNS பிரிவு 69-ன் கீழ் வழக்குப்பதிவு!
வஹிதா அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, புகார் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
புகாரில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்த போலீசார், தற்போது முத்துக்குமரன் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கம் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபடுவது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இந்தப் பிரிவு பொருந்தும். இந்த வழக்கில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றச்சாட்டுகளை மறுத்த முத்துக்குமரன்... எதிர்ப் புகாரால் திருப்பம்!
மறுபுறம், வஹிதா முன்வைத்த குற்றச்சாட்டுகளை முத்துக்குமரன் ஏற்கெனவே மறுத்துள்ளார். இருவருக்கும் இடையே இருந்தது நட்பு மட்டுமே என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை வஹிதா வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முத்துக்குமரனும் எதிர்ப் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை ஆய்வு செய்த விருகம்பாக்கம் போலீசார், அதில் குற்றவியல் வழக்குப்பதிவு செய்வதற்கான முகாந்திரம் இல்லை எனத் தெரிவித்ததாகவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
முடிவுக்கு வராத பஞ்சாயத்து... அடுத்து என்ன நடக்கும்?
ஒருபுறம் முத்துக்குமரன் தங்களுக்குள் இருந்தது நட்பு மட்டுமே எனக் கூறுகிறார். மறுபுறம், திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாக வஹிதா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். சமூக வலைதளங்களில் தொடங்கிய இந்த விவகாரம் தற்போது காவல்துறை வழக்குப்பதிவு வரை சென்றுள்ளது.
இன்று முடியும், நாளை முடியும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் பிரச்னை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. முத்துக்குமரன் மீதான வழக்குப்பதிவைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விசாரணையின் முடிவில்தான் இந்த விவகாரத்தின் முழுமையான உண்மை நிலை தெரியவரும்.
What's Your Reaction?