கொலு வைத்து தேவி வழிபாடு...கூட்டு சேர்ந்து அற்புத பிரார்த்தனை!
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்பாளை வழிபடுவது, அகண்ட தீபம் ஏற்றுவது, சரஸ்வதி பூஜை செய்வது, அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட வழிபாட்டு முறைகளையும் அவற்றின் ஆன்மிகப் பலன்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.
பலன் தரும் பரிகாரம்! - வி.ராம்ஜி
சிவனாருக்கு ஒரு ராத்திரி... அது சிவராத்திரி. அம்பாளுக்கு ஒன்பது ராத்திரி... அவை நவராத்திரி என்று சொல்லுவார்கள். சக்தியும் சாந்நித்தியமும் மிக்க நவராத்திரி காலங்களில், அம்பாள் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்தது நடக்கும். எண்ணிய காரியத்தை ஈடேற்றித் தந்தருள்வாள் அம்பாள்.
பகவான் ஸ்ரீராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்தார். பூஜித்து வழிபட்டார். இதன் பின்னர்தான், அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் விவரிக்கிறது. ஸ்ரீராமர், விஷ்ணு, பிரம்மா, விஸ்வாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், வனவாச காலத்தில் பாண்டவர்கள் முதலானோர் நவராத்திரி பூஜைகள் செய்து, விரதம் மேற்கொண்டார்கள். அம்பிகையை ஆராதித்தார்கள். அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
நவராத்திரி காலமொன்றில்தான் உமையவள் ஊசி மேல் தவமிருந்து சிவ வழிபாடு செய்தாள் என்கிறது புராணம். அதனால் அந்தச் சமயங்களில் வீட்டில் கிழிந்த துணிகளைத் தைக்கக் கூடாது. முடிந்தவரைக்கும் ஊசியைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கிழிந்தவற்றைத் தைக்காமல் இருப்பதே நல்லது என்கிறது சாஸ்திரம்.
நவராத்திரி தொடங்கிவிட்டது. இந்த ஒன்பது நாட்களும் கொலு வைப்பதும் சக்தியை வழிபடுவதும் சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கி மகிழ்வதும் என விமரிசையாக நடைபெறும். இந்த வழிபாட்டில், மிக முக்கியமானது அகண்ட தீபம்.
நவராத்திரி விழாவின் போது, தினமும் தேவி மகாத்மியம் பாராயணம் செய்வது நல்லது. சகலகலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி முதலானவற்றைப் பாராயணம் செய்து ஜபித்து அம்பிகையை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.
இதேபோல், அகண்ட தீபம் ஏற்றி வழிபடும் முறையும் உள்ளது என்கிறார்கள். அகண்ட தீபம் என்பது அகலமான பாத்திரத்தில் அல்லது விளக்கில் தீபமேற்றி வழிபடுவது அல்ல. ஒரு தீபத்தை, அது அணையாமல் எரிந்து கொண்டே இருக்கச் செய்வது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களோ அல்லது கடைசி நாளன்றோ அகண்ட தீபத்தை ஏற்றி வைக்கலாம்.
அம்பாளை ஆவாஹனம் செய்த இடத்தில், அல்லது பூஜையறையில் மணைப்பலகையை வைக்கவேண்டும். அதன் மேல், மூன்று கோணமாக சந்தனத்தால் கோலம் போல் கோடுகள் இட வேண்டும். அதற்கு நடுவே, சந்தனம் குங்குமம் இட்டு, பூக்களால் அலங்கரித்து, அதன் மீது விளக்கை வைக்க வேண்டும். இரண்டு விளக்குகளையும் ஏற்றி வைக்கலாம்.
இதில் ஒரு விளக்கு வெள்ளி மற்றும் பித்தளை விளக்காகவும் இன்னொன்று அகல் விளக்காகவும் இருப்பது விசேஷம். முடிந்தவர்கள், ஒன்பது நாட்களும் விளக்கேற்றி வைக்கலாம். அது இன்னும் கூடுதல் விசேஷம். கூடுதல் பலன்! இந்த விளக்குகள், தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கவேண்டும். இதுவே அகண்ட தீபம். பூஜைகள் முடிந்த பிறகு இந்த விளக்குகளை தானமாகத் தருவது, நம் வீட்டில் இன்னும் இன்னும் சுபிட்சங்களை வாரி வழங்கும். சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும்.
சரஸ்வதி பூஜையன்று குழந்தைகளின் பாடப் புத்தகங்களை, பேனா, பென்சிலை, கல்வி உபகரணங்களை வைத்து, அதன் மீது நெல்லித்தழை, மாங்கொழுந்து, மலர்கள், அட்சதை தூவி, தூப தீபம் காட்டி, பழம், பாயசம், நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
நவராத்திரி எனும் பண்டிகை, உறவுகளுக்குள்ளேயும் தோழமைகளுக்குள்ளேயும் அன்பை வளர்க்கும் விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. கொலு நாட்களில், வீட்டுக் குழந்தைகளைக் கொண்டு, கொலு பார்க்க, மாலை வேளைகளில் வந்தவர்களை வரவேற்று உபசரிக்கப் பழக்குங்கள். இவையெல்லாம் குழந்தைகளிடம் நல்ல பழக்கங்களை ஏற்படுத்தும். பண்பை மேம்படுத்தும். மரியாதையையும் ஒழுக்கத்தையும் தரும் என்கிறார்கள். மனிதநேயத்தையும் வளர்க்கும் என்கிறார்கள்.
முக்கியமாக, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஏழைகளுக்கு அன்னதானம் செய்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தாம்பூலம் மற்றும் இனிப்புகள் வழங்கினால் உறவுகளுக்குள்ளும் அக்கம்பக்கத்திலும் நல்ல இணக்கம் ஏற்படும். அன்பு மேம்படும் என்பது உறுதி! என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
நவராத்திரிப் பெருவிழாவில் அக்கப்பக்கத்தில், தெரிந்தவர் தெரியாதவர் என யார் வீட்டில் கொலு வைத்திருந்தாலும் அந்த கொலுவைப் பார்த்து ரசிப்பதும் வேண்டிக்கொள்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பது உறுதி.
What's Your Reaction?

