"இந்திய அணியில் வாய்ப்பு இல்லை என்றால் எனக்கு இழப்பில்லை.." முகமது ஷமி அதிரடி!

இந்திய அணியில் தனக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதனால் தனக்கு எந்த இழப்பும் இல்லை என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

Oct 10, 2026 - 20:02
"இந்திய அணியில் வாய்ப்பு இல்லை என்றால் எனக்கு இழப்பில்லை.." முகமது ஷமி அதிரடி!
Mohammed Shami

இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அது தனக்கு இழப்பு அல்ல என்று வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மற்றொரு மூத்த வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்காக மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து ஷமி இவ்வாறு கூறியுள்ளார்.

36 வயதான முகமது ஷமி, கடைசியாக 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். 2023 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், ஏற்பட்ட காயம் மற்றும் தொடர்ச்சியான உடல்நலச் சிக்கல்கள் காரணமாக அவர் அணியில் இருந்து விலக வேண்டியிருந்தது.

அதன்பின்னர் காயத்தில் இருந்து மீண்டு, உள்நாட்டுப் போட்டிகளில் பெங்கால் அணிக்காகத் தனது உடல்தகுதியையும் திறமையையும் நிரூபித்து சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், தேர்வுக்குழு அவரை மீண்டும் இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கவில்லை. பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா போன்ற இளம் வீரர்களுக்கே தேர்வுக்குழு முன்னுரிமை அளித்து வந்தது.

ஐபிஎல் போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின் மூலம் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். இது அவரது ஒருநாள் போட்டி மீண்டுவருகைக்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது. இதனால் ஷமிக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

இது குறித்துப் பேசிய ஷமி, "புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி; அது அவருக்கு நல்லது. ஆனால் அவரது தேர்வு குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். தற்போது ரஞ்சி கோப்பை போட்டியில் மட்டுமே எனது முழு கவனமும் உள்ளது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக எனக்கு இதேதான் நடக்கிறது. எனக்கு மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அது எனக்கு இழப்பில்லை" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இளம் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாத நிலையில், மூத்த பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஷமி மீதான எதிர்பார்ப்பும் கவனமும் மீண்டும் அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow