T20 world Cup: டி 20 உலகக் கோப்பை சூப்பர் 8... வங்கதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில், வங்கதேசத்தை எளிதாக வென்றது ஆஸ்திரேலியா.
ஆண்டிகுவா: 2024ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இத்தொடரில் லீக் போட்டிகள் முடிவுக்கு வந்ததையடுத்து சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் சூடி பிடித்துள்ளன. இன்று வெஸ்ட் இண்டீஸின் ஆண்டிகுவா நகரில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலியா – வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வங்கதேச அணியின் ஓப்பனர்கள் தன்சித் ஹசன், லிட்டன் தாஸ் இருவரும் பேட்டிங்கை தொடங்கினர்.
ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரிலேயே வங்கதேச வீரர் தன்சித் ஹசன், ஸ்டார்க் பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச கேப்டன் சாண்டோ ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியதால், 36 பந்துகளுக்கு 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக இன்னொரு ஓப்பனரான லிட்டன் தாஸ் 16 ரன்களுக்கு நடையை கட்டினார். அதன்பிறகு களமிறங்கிய வீரர்களில் தவ்ஹித் ஹ்ரிடோய் மட்டுமே ஓரளவு சிறப்பாக விளையாடினார். அவர் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இது கம்மின்ஸின் ஹாட்ரிக் விக்கெட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
அதாவது 17.5வது ஓவரில் மஹம்மதுல்லாவின் விக்கெட்டை வீழ்த்திய கம்மின்ஸ், அதற்கு அடுத்த பந்தில் மெஹதி ஹசனை அவுட் செய்தார். அதனைத் தொடர்ந்து 19வது ஓவரின் முதல் பந்தில் தவ்ஹித் ஹ்ரிடோய் விக்கெட்டையும் வீழ்த்தி சாதனை படைத்தார் கம்மின்ஸ். ஒட்டுமொத்தமாக வங்கதேச அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, ஆரம்பம் முதல் அதிரடி காட்டியது. அந்த அணியின் ஓப்பனரான டேவிட் வார்னர் 35 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார். ட்ராவிஸ் ஹெட் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ரிஷாத் ஹுசைன் பந்தில் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அதன்பின்னர் போட்டியை நடத்த முடியாததால், டார்க்வொர்த் லூயிஸ் விதிப்படி, ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சூப்பர் 8 குரூப் 1ல், நெட் ரேட் அடிப்படையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது ஆஸ்திரேலியா அணி. நேற்று மாலை நடைபெற்ற இன்னொரு போட்டியில் இந்திய அணி, ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?