மதுரை சித்திரை திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை சித்திரை திருவிழா முதலில் மீனாட்சிக்கும், பிறகு அழகருக்கும் என மொத்தம் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெறும். 2026ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம்19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் என மீனாட்சி திருவிழா முடிந்த பிறகு அழகர் திருவிழா தொடங்கும். அப்படி அழகர் கோயிலில் இருந்து புறப்படும் அழகரை பக்தர்கள் தோளிலேயே சுமந்து சென்று மதுரைக்கு வந்து ஆடி பாடி மகிழ்வித்து மீண்டும் அழகர் மலைக்கு அழைத்து செல்வது வழக்கம்.
அப்படி நேற்று முன் தினம் அழகர் மலையில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் எதிர்சேவையை முடித்த பிறகு நேற்று தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு சென்றார். இன்று (மே 1) அதிகாலை 2.30 மணியளவில் வழியில் உள்ள தல்லாகுளம் கருப்பணசுவாமி கோயில் அருகே ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வைகை ஆற்றை நோக்கி பயணித்தார். அதிகாலை 5.35 மணி முதல் 6.05 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்கினார்.வைகை ஆற்றில் குவிந்த லட்சகணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் அழகரை தரிசனம் செய்தனர்.
அவரை மதுரை தெற்குமாசி வீதி வீரராகவப்பெருமாள் வரவேற்றார். பல லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரை தரிசித்தனர். இதற்கென மதுரை சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் துவங்கி வெளிநாட்டினரும் மதுரை வந்தனர். வைகை ஆற்றில் இருந்து புறப்படும் அழகருக்கு இன்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டகப்படியில் பக்தர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு வழி நெடுக பல்வேறு மண்டகப்படியில் எழுந்தருளும் அழகர் இரவு வண்டியூர் பெருமாள் கோயிலை சென்றடைகிறார். அழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை தொடர்ந்து, வேண்டுதலை நிறைவேற்ற முடிகாணிக்கை செய்யும் பக்தர்கள். தென்கரை பகுதியில் ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தசாவதாரக் காட்சி, நாளை நள்ளிரவு 12 மணி முதல் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய நடைபெற உள்ளது. இதில் பெருமாளின் பத்து அவதாரங்களையும் பக்தர்கள் தரிசிக்கலாம். மறுநாள் காலை மோகினி அவதாரத்தில் வீதி உலா வரும் அழகர், மே 4-ம் தேதி அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளி, பின்னர் தல்லாகுளம் கோவிலில் விடைபெற்று மீண்டும் அழகர்மலைக்குத் திரும்புவார்.
What's Your Reaction?