ரயில் பயணிகளுக்கு ஷாக்.. குடிநீரில் ‘E.Coli’ பாக்டீரியா? CAG சொன்ன அதிர்ச்சி தகவல்!
ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் குறித்து வெளியாகியுள்ள சிஏஜி அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
512 ரயில் நிலையங்களை மையமாக வைத்து சிஏஜி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள ரயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளன. பயணிகள் அதிகம் பயன்படுத்தும் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், கோயம்புத்தூர், பாலக்காடு, ஹைதராபாத் உள்ளிட்ட நிலையங்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
ஆய்வில் கிடைத்த தகவல்களில் முக்கியமாக கவனம் பெற்றிருப்பது குடிநீரின் தரம். சில ரயில் நிலையங்களில் பயணிகள் குடிப்பதற்காக பயன்படுத்தும் நீர் மாதிரிகளில் நோய் ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2023-24ஆம் ஆண்டில் 9 ரயில்வே மண்டலங்களைச் சேர்ந்த 56 நிலையங்களில் உள்ள வாட்டர் கூலர்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் E. coli இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கு முந்தைய 2022-23ஆம் ஆண்டில், 8 மண்டலங்களில் உள்ள 49 நிலையங்களின் குடிநீர் குழாய்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் Total Coliform கண்டறியப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.
மனிதர்கள் அல்லது விலங்குகளின் கழிவுகள் மூலம் நீர் மாசுபடும் சூழலில் E. coli போன்ற பாக்டீரியாக்கள் குடிநீரில் கலக்கக்கூடும் என்பதால், இந்த கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கிடையே, பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் தொடர்பான ஆய்வு முடிவுகளும் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 512 நிலையங்களில் 458 இடங்களில் குறைந்தபட்ச தேவையான வசதிகள் போதுமான அளவில் இல்லை என தெரியவந்துள்ளது. இது ஆய்வு செய்யப்பட்ட நிலையங்களில் 90 சதவீதத்துக்கும் நெருக்கமான எண்ணிக்கையாகும்.
பெரிய ரயில் நிலையங்களும் இந்த குறைபாடுகளில் இருந்து தப்பவில்லை. மும்பை சென்ட்ரல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், ஹவுரா, சீல்தா மற்றும் டெல்லி போன்ற முக்கிய நிலையங்களில் பயணிகள் அமருமிடம், தூய்மை, குப்பைகளை சேகரிக்கும் வசதி, ரயில் தொடர்பான தகவல்களை வழங்கும் மின்னணு பலகைகள் உள்ளிட்டவற்றில் குறைகள் இருப்பதாக சிஏஜி தெரிவித்துள்ளது.
ரயில் நிலையங்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ரயில்வே வாரியம் ஏற்கனவே 2018ஆம் ஆண்டிலேயே குறைந்தபட்ச வசதிகளுக்கான விதிமுறைகளை வகுத்திருந்தது. NSG-1 முதல் NSG-6 வரையிலான பிரிவுகளுக்கு உட்பட்ட நிலையங்களில் இந்த வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் நடைமுறையில் அந்த இலக்கு முழுமையாக எட்டப்படவில்லை.
இதையடுத்து, ரயில் நிலையங்களில் குடிநீர் அமைப்புகளை தொடர்ச்சியாக கண்காணிக்கவும், பயணிகளுக்கு வழங்கப்படும் நீரின் தரத்தை விதிமுறைகளின்படி தொடர்ந்து பரிசோதிக்கவும் சிஏஜி ரயில்வே நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
ரயில் நிலையங்கள் அவற்றின் வருவாய் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் NSG-1 முதல் NSG-3, NSG-4 முதல் NSG-6 என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து பிரிவுகளிலும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் முறையாக உறுதி செய்யப்பட வேண்டிய அவசியத்தை இந்த அறிக்கை மீண்டும் உணர்த்தியுள்ளது.
What's Your Reaction?
