படம் மறந்தாலும்... பாட்டு மறக்குமா? ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ சொல்லும் 70s இசை நினைவுகள்!
1976-ல் வெளியான ‘நீ ஒரு மகாராணி’ படத்தை பலரும் மறந்திருந்தாலும், சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பி., பி.சுசீலா குரலில் ஒலித்த ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ பாடல் இன்றும் ரசிகர்களை பால்ய நினைவுகளுக்குள் அழைத்துச் செல்கிறது.
படம் அவுட்டு... பாட்டு ஹிட்டு! - வி.ராம்ஜி
‘மயிலு இருக்கிற அழகுக்கும் அறிவுக்கும் சீமையிலேருந்து கோட்டுசூட்டு போட்டவன் தான் வருவான். இந்த சப்பாணியா வருவான்’ என்று ‘பதினாறு வயதினிலே’ கிராமத்தார் பேசுவது போல், ‘நமக்கும் படம் பண்ணனும்னு ஆசைதான். ஆனா, எம்ஜிஆர், சிவாஜியை வைச்செல்லாம் படம் எடுக்க அம்புட்டு பணம் இல்லீங்களே..’ என வருந்தியவர்களுக்கு, ஆபத்பாந்தன் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்தான் என்பதை, சினிமா வரலாறு சொல்லும்!
அறுபதுகளின் நடுவே நடிக்கவந்து, தனக்கென மார்க்கெட் வேல்யூ வைத்திருந்த ஜெய்சங்கர், கர்வத்தை மட்டும் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை. அதேபோல், பீரோவில் கட்டுக்கட்டுகளாக பணம் சேர்க்கவும் ஆசைப்படவில்லை. எழுபதுகளின் நடுவிலும் அப்படியே குணம் மாறாமல் இருந்தார். அதேபோல், ஸ்ரீப்ரியாவின் ஆரம்பப் படங்களில் இதுவொன்று. முதல்படமான ‘அவள் ஒரு தொடர்கதை’யிலேயே டாப் கியர் போட்ட சுஜாதாவுக்கும் ஆரம்பக்கட்ட படங்களில் ஒன்றுதான்! ஆனால் என்ன... அப்போது சுஜாதாவை அதாவது நாயகியை முன்னிறுத்தியே பல படங்கள், வரிசைவரிசையாக வந்தன.
சொர்ணம் இயக்கத்தில் வந்த ‘நீ ஒரு மகாராணி’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், பாட்டுக்கச்சேரிக்காரர்களுக்கு அல்வாத்துண்டு. தூக்கமாத்திரை இருக்கிறது. தூக்கம் வராமல் இருப்பதற்கு மாத்திரை உண்டா? விழாக்களில் இரவு பத்துப் பதினொரு மணிக்குத் தொடங்கும் கச்சேரியில் அங்கொருவரும் இங்கொருவருமாக தூங்கி வழிந்தாலோ விழுந்தாலோ... ‘அடுத்த பாடல்... பாடல்... டல்... ல்... எல்லோரும் விரும்பிக் கேட்ட பாடல்...’ என்று இந்தப் பாடலைச் சொன்னதும், தூக்கமும் சரி, துக்கமும் சரி... ஊர் எல்லையைத் தாண்டி ஓடியேபோயிருக்கும்!
அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை
பருவம் பதினாறு
என்று எஸ்பிபி பாடுவார்.
அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன்
வாழிய பல்லாண்டு
என்று சுசீலாம்மா கொஞ்சுவார்.
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
என்று அந்தக் காதலர்களான ஜெய்சங்கரும் ஸ்ரீப்ரியாவும் கொஞ்சிப் பாடி நடித்தபோது, மேடைக்கு எதிரில் ‘ஹா’என விழிகள் விரிய பாடுவதையும் வாசிப்பதையும் பார்த்துக்கொண்டிருந்த அத்தனைபோரும் அந்த ஐந்துநிமிடம் சொர்க்கத்தில் வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை!
கிளார்நெட், புல்லாங்குழல் என உச்சஸ்தாயி எடுக்கும் இந்தி ஸ்டைலில் அமைந்திருக்கும் பாடல் என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். ‘நம்மூர்லயும் இதுமாதிரிலாம் போட ஆள் இருக்குல்ல...’ என்று சங்கர் கணேஷைக் கொண்டாடினார்கள். அவர்களை நிறுத்தி, ‘இந்த ரெண்டுபேர்ல யாரு சங்கர், யாரு கணேஷ். லட்ச ரூபாய் பரிசு’ என்று பாண்டிய மன்னனே அறிவித்தாலும், ‘இவர்தான் சங்கர். இல்ல இல்ல... இவர்தான் கணேஷ்’ என்று குழம்பித்தான் போனார்கள். ஆனால் என்ன... இந்த இரட்டை இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கொண்டாடித் தீர்த்தார்கள் சினிமா ரசிகர்கள். இவர்களின் ஆயிரம் தேன் துளிகளில் ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’யும் ஒரு துளி தேன்!
வாலைப் பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம் எதுவென அறிந்தது நெஞ்சம்
என்று படபடவெனப்பாடிக் கொஞ்சி வேகமெடுப்பார் எஸ்பிபி.
போகப் போக புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென்ன அதிசயம் இதுவென விளக்கிடு கொஞ்சம்
என்று சுசீலாம்மாவும் இளமை மாறாமல் கூடுதல் சுவை சேர்த்து மயக்குவார்.
இன்பத்தில் நீயும் நானும் ஊமை இல்லையோ என்று பாலு பாட... மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ என்று சுசீலாம்மா குழைய... ஜெய்சங்கர், ஸ்ரீப்ரியா இதேபோல் ஏராளமான படங்களில் ஜோடி போட்டதை மக்கள் வரவேற்றார்கள். ஜெய்சங்கர் - ஜெயசித்ரா போல்,ஜெய்சங்கர் - ஸ்ரீப்ரியா ஜோடியும் செம ஜோடி என கொண்டாடப்பட்டது.
மீனிருக்கும் கண்ணில் நான் இருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்றுக் கொள்வாயோ
‘கண்ணு மீன் மாதிரி இருக்கு. அந்தக் கண்ணில் நான் இருந்து நீந்தட்டுமா? என்று வாலி வார்த்தையில் காதல் சேர்ப்பார்.
நினைவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை ஏந்திக் கொள்வாயோ
வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவது போல் அடுத்து காதலுடன் காமத்தையும் தடவிக் கொடுத்திருப்பார் வாலி.
அச்சத்தை ஆசை வந்து வெல்லக்கூடாதோ
அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ...
எழுபதுகளில், பொங்கல் விழா, கபடி விழா, கோயில் திருவிழா, அப்புறம் தொடர்ந்து 24 மணி நேரமும் ஏழெட்டு நாட்கள் ஒரு வட்டப்பகுதியில் சைக்கிளை விட்டு இறங்காமல், சைக்கிள் ஓட்டி சாதிக்கும் விழா..., கல்யாண, காதுகுத்து, வளைகாப்பு விசேஷங்கள்... என பாகுபாடு இல்லாமல், ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை பருவம் பதினாறு’ பாடல் அங்கிங்கெனாதபடி, எல்லா விசேஷங்களிலும் நீக்கமற ஒலித்துக்கொண்டே இருக்கும்!
எனக்கு எட்டு வயதிருக்கும்போது, ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ பாடல் எனக்குப் பரிச்சயமானது. இப்போதும் இந்தப் பாடலை ஒருஎட்டு கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். டைம் மிஷினில் ஏறி, அந்த டிராயர் வயசுக்குக் கொஞ்சம் போய், உலாத்திட்டு வருகிற சுகத்தை இந்தப் பாடல் கொடுக்கும்! உங்களுக்கும் டைம் மிஷினில் ஒரு டூர் சென்று, உங்கள் பால்யத்தின் சடுகுடுவுடன் வாழ்ந்துட்டு வரணுமா? இந்தப் பாடலைக் கேளுங்கள்; டைம் மிஷினில் ஏறுங்கள்!
What's Your Reaction?



