அண்ணியாரும் தண்ணீரும்... ஓபிஎஸூடன் ஓயாத பிரச்னை... சட்டமன்றத்தில் கலகல..!
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, மீண்டும் தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் எழுப்பிய தண்ணீர் பாட்டில் விவகாரம் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
விவாதத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக ஏற்கெனவே தான் கேட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். அப்போது, இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தடையாக இருந்ததாகக் கூறிய அவர், நேற்று(ஆகஸ்ட் 06) அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, "சும்மா சொன்னேன்" என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், தண்ணீர் பாட்டில் வழங்குவதற்கு தான் எந்தத் தடையும் விதிக்கவில்லை என விளக்கம் அளித்தார். மேலும், தன் மீது கூறப்பட்ட அந்தக் கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவர் நகைச்சுவையாக தெரிவித்தார். அவரது பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
இந்த விவகாரத்தின் பின்னணியிலும் ஒரு பழைய சம்பவம் இடம்பெற்றது. அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் தன் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, பாட்டிலை தூக்கி வீசினால் என்ன நடக்கும் என்பது தனக்குத் தெரியும் என்ற வகையில் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஓபிஎஸ் பேசியிருந்தார். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓபிஎஸ் தனது சொந்த அனுபவத்தைச் சொல்வதாகக் கூறி நகைச்சுவையாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், அதே தண்ணீர் பாட்டில் விவகாரம் மீண்டும் சட்டப்பேரவையில் எதிரொலித்ததும், பிரேமலதா மற்றும் ஓபிஎஸ் இடையிலான வார்த்தைப் பரிமாற்றம் அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
What's Your Reaction?



