4 லிட்டர் பெட்ரோல் பதுக்கியவருக்கு 21 நாட்கள் சிறை : எந்த நாட்டில் தெரியுமா ?
இலங்கை எரிபொருளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 4 லிட்டர் பெட்ரோலைப் பதுக்கி வைத்திருந்த நபருக்கு உள்ளூர் நீதிமன்றம் 21 நாள்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கடந்த 28-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் உள்பட பெட்ரோல்,டீசல் பெரும் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அந்நாட்டு அரசு எரிபொருள் பதுக்கலுக்குத் தடை விதித்துள்ளது. எரிபொருள் விநியோகத்துக்காக பிரத்யேக 'கியூ.ஆர்.' குறியீடு அடிப்படையிலான முறையை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 15-ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கார்களுக்கு வாரத்துக்கு 15 லிட்டரும், பேருந்துகளுக்கு 60 லிட்டரும் மட்டுமே எரிபொருள் வழங்கி வருகிறது. இந்நிலையில், வடமேற்கு மாகாணத்தின் நிகவெரட்டியா பகுதியைச் சேர்ந்த வசந்த குமார பாலசூரியா என்பவர் பெட்ரோல் பதுக்கியதாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணையின்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பாலசூரியா, தனது மறைந்த பெற்றோரின் ஆண்டு நினைவு மதச்சடங்குக்காக வீட்டின் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தும் பணிக்காகவே இந்த 4 லிட்டர் பெட்ரோலை வைத்திருந்ததாகக் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். இருப்பினும், சட்டத்தை மீறியதாகக் கூறி அவருக்கு 21 நாள்கள் சிறைத் தண்டனையுடன், 1,500 இலங்கை ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டு இருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

