சுசீலாம்மா, ஜேசுதாஸ், வைரமுத்து...காதலில் சொக்கவைக்கும் ’ரெண்டு கன்னம் சந்தனக்கிண்ணம்!’

‘சிவப்பு மல்லி’ படத்தின் ‘ரெண்டு கன்னம் சந்தனக்கிண்ணம்’ பாடல், வைரமுத்துவின் காதல் வரிகளாலும் ஜேசுதாஸ், பி.சுசீலாவின் இனிய குரல்களாலும் இன்றும் ரசிகர்களின் இளமைக்கால காதல் நினைவுகளை மீட்டெடுக்கும் அழியாத காவியமாகத் திகழ்கிறது.

Oct 14, 2026 - 20:00
Oct 14, 2026 - 16:58
சுசீலாம்மா, ஜேசுதாஸ், வைரமுத்து...காதலில் சொக்கவைக்கும் ’ரெண்டு கன்னம் சந்தனக்கிண்ணம்!’

படம் அவுட்டு... பாட்டு ஹிட்டு! - வி.ராம்ஜி

சிவப்பு என்பது மிகச்சிறந்த குறியீடு. அதை வறுமையின் நிறமாகச் சொன்ன சினிமாவும் உண்டு. வன்முறையின் அடையாளமாகச் சொன்ன கதையும் இருக்கிறது. பொதுவுடைமைக் கொள்கையின் சின்னமாக உலகமெங்கும் இன்றைக்கும் ஓங்கி ஒலித்து, சங்காரம் எழுப்பிக்கொண்டிருக்கிற நிறமாக, தொழிலாளர்களின் எழுச்சியாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த உலகில் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்கள் எனப்படுகிற கார்ப்பரேட் சித்தாத்தங்கள் எப்போதெல்லாம் தலைதூக்கி, தன் காலால் தொழிலாளியின் வயிற்றை மிதிக்கிறதோ, அந்த செஞ்சட்டை அணிந்து, செங்கொடி ஏந்தி, உரக்கக் குரல் எழுப்புகிற காம்ரேட்டுகள் இருந்துகொண்டே இருப்பார்கள். மல்லி என்றாலே சிவப்புக்கு எதிரானது. வெண்மைநிறம்தான் இதன் அடையாளம்.

ஆனால் இயக்குநர் இராம.நாராயணன் சமாதானத்தையும் சவடால் ஆதிக்கத்துக்கு எதிராகவும் சேர்த்துச் சொன்ன ‘சிவப்பு மல்லி’, ஆகச்சிறந்த படங்களில் ஒன்று. ‘ஏம்பா... இராம நாராயணன் இப்படிலாம் கூட படம் எடுத்திருக்காரா?’ என்று நம் கை கிள்ளி, நம்மையே பார்க்கவைக்கிற ஆச்சரியக் கேள்வியும் அதிசய பதிலுமாக அமைந்த ‘சிவப்பு மல்லி’ படம், அசாதாரணம்! விஜயகாந்தும் சந்திரசேகரும் இணைந்து நடித்தார்கள் என்று இப்போது சொல்லலாம். ஆனால், சந்திரசேகரும் விஜயகாந்தும் நடித்த படம் என்றுதான் அப்போது சொன்னார்கள்.

இந்தப் படத்தைப் பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால் நிறையபேருக்கு’இந்தப் பாட்டு இந்தப் படத்திலா?’ என்றொரு குழப்பப் பந்து, மனதுக்குள் உருண்டுகொண்டே இருக்கிறது. ஏவி எம் உருண்டை லோகோவில் வந்த உன்னதப் படங்களில் இதுவும் ஒன்று.

சங்கர் கணேஷ் இசையமப்பில் உருவான ‘சிவப்பு மல்லி’யில் சிவப்பின் உச்சமாக காக்கி உடை அணிந்த தொழிலாளர் சந்திரசேகர். வெண்மையின் மென்மை சொல்லும் நாயகியாக சாந்தி கிருஷ்ணா. ரெண்டுபேரும் காதலிப்பார்கள். அந்தக் காதலின் தாக்கத்தைத் தூக்கிப்பிடிக்கும் வரிகளாக, தொடுத்துக் கொடுத்தார் கவிப்பேரரசு வைரமுத்து.

ஜேசுதாஸ் குரலும் சுசீலாம்மாவின் குரலும் இணைந்த காதல் பாடல்களில் மிகச்சிறந்த பாடல் வரிசை என்று என் மனசின் பட்டியல், ஹம்மிங் செய்துகொண்டே இருக்கிற பாடலில் ‘ரெண்டு கன்னம் சந்தனக்கிண்ணம்’ பாடலும் ஒன்று! ’ஹோலி ஹோலி ஹோலிஹோலி’ என்று தொடங்கும் ஹம்மிங் ஆஹா கொண்டாட்டம்!

தன்ன னன்ன தன ன னன்னா
தான னன தானன னனா
தான தனன தான தனன தானன னன
தான தனன தான தனன தானன னன

என்று வருகிற ஹம்மிங்கும் அந்தக் குரலும் நம்மை அப்படியே இந்தப் பாட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்திவிடும். அடுத்து வைரமுத்துவின் சந்தன வரிகள் மணத்து, காதலையும் மனசையும் கமழச் செய்யும்.

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்

இரண்டு கன்னங்களும் சந்தனக்கிண்ணம். கல்யாணம் முதலான விழாக்களில் சந்தனம் தந்து வரவேற்பார்கள் அல்லவா. இந்தக் காதலின் தொடக்கத்தையும் குதூகலத்தையும் சந்தனக்கிண்ணம் எனும் தொடக்கத்துடன் காமமும் சேர்த்துக் குழைத்துக் கொடுக்கிறார் வைரமுத்து. தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் என்று சொல்லிவிட்டு, அடுத்ததாக, பூவையின் கையில் பூவை அள்ளிக் கொடுத்த பிறகும் கூட, அந்தக் கையில் இன்னும் மணம் வீசிக்கொண்டே இருக்கிறது என்கிறார்.

எடுத்துக் கொடுக்கையிலே இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்
என்று சாந்தி கிருஷ்ணாவுக்காக சுசீலாம்மா காதலின் உஷ்ணத்தைச் சொல்லுவார்.

உள்ளங்கைச் சூடுப் பட்டு மலர்க் கொஞ்சம் வாடும்
மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்
என்று சந்திரசேகருக்கு வக்காலத்து வாங்குக் கொஞ்சுவார் ஜேசுதாஸ். சிதைக்காத இசையும் மென்மையான தபேலாவும் வைரமுத்துவின் வார்த்தைகளை நீவிவிட்டுக் கொண்டே இருக்கும். அது அந்தக் காதலர்களுக்கும் காதலாகி கசிந்துருகுகிற ரசிகக் கூட்டத்தினருக்கும் வைரமுத்து தந்த பூச்செண்டுக் கவிதைகள்.

இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
என்று இளம்பிறை அப்படியே இருக்கட்டும், பெளர்ணமி வந்தால் முழுநிலவாகிவிடும். முழுநிலவென்றால் வெளிச்சப்பாய் பூமியில் விரியும். இருள் காணாமல் போகும். இருட்டு இல்லாமல் போய்விடும். இந்த இருட்டு, இந்த இருள் எனக்கு வேண்டும் என்று பிறையையும் நிலவையும் இருளையும் சொல்லி, காமத்தில் கண்ணியம் காக்கிறார் வைரமுத்து.

இனி தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே...
அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே...
சுடாதே.. தொடாதே..!

என்ற வரிகளை என் இளம்வயதில் கேட்டுவிட்டு, ‘நானும் கவிஞர்தான், நாமளும் வைரமுத்துதான்’ என்று ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதி, ‘நிலா, உலா, பலா, விழா’ என்று எழுதியதை மடித்து, ‘லவ் யூ’ சொன்ன காலமெல்லாம் மனதில் ‘லவ் யூ’வாக இருக்கிறது, இப்போதும்! நிலவை சுடாதே என்கிறார். சூரியனிடம் இரவைத் தொடாதே என்கிறார் வைரமுத்து. பெண்ணை ஆண் தொட்டால், அந்தச் சங்கமம் காமத்தின் உச்சம். இரவை சூரியன் தொட்டுவிட்டால், அது வெளிச்சத்தின் தொடக்கம்.

தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
நனைந்த மலர்களுக்கு குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ

இந்த வரிகளுக்கெல்லாம் பின்னாளில் படம் பார்க்கும்போது கைத்தட்டி ரசித்தேன். முன் வரிசைக்காரர்கள் திரும்பி என்னை ‘ஒருமாதிரி’ பார்த்தார்கள். அந்த ‘ஒருமாதிரி’க்கு ‘எதுக்குய்யா கைதட்டுறான், லூசு மாதிரி’ என்று அர்த்தம். தாகம் எடுக்கும்போது மழை அடிக்கணும். அந்த வானமே இறங்கிவந்து குடைப்பிடிக்கணும். மழையில் நனைந்துவிட்ட மலர்களுக்கு குளிரெடுக்கும்.

ஆகவே வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டணும் என்ற வரிகளைக் காதலித்த பயபுள்ளைங்க, ஜேசுதாஸின் குரலைக் காதலித்தோம். சுசீலாம்மாவின் உச்சரிப்பைக் காதலித்தோம். சங்கர் கணேஷ் எனும் இரண்டு இசையமைப்பாளர்களையும் காதலித்தோம். சந்திரசேகரையும் சாந்திகிருஷ்ணாவையும் காதலித்தோம். மொத்தமாக, அருகில் உள்ள எஞ்ஜோட்டுப் பொண்டுகளை காதலித்துவிட்டு, எங்களின் காதல் புயல், மையம் கொண்ட இடமும் மையல் கொண்ட இடமும் டிரஸ்ட்புர நாயகன் வைரமுத்து விலாசத்தில்தான்!

சில பாடல்களைக் கேட்கும்போது ஏக்கம் வரும்; நம்பிக்கை பிறக்கும்; சோகம் காணாமல் போகும். சுகம் ஊற்றெடுக்கும். ‘ரெண்டு கன்னம் சந்தனக்கிண்ணம்’ பாட்டு, ‘சோகப்படுறதுக்கு ஒன்னுமே இல்லியா? இதைக் கேளு’ என்பது போல இருக்கும். ‘என்னது காதலிச்சதே இல்லியா? இந்தா ஒருநாலு நிமிஷம் டைம். நல்லா லவ் பண்ணிக்கோ’ என்று சொல்லுவது போலவும் இருக்கும்.

எட்டாம் வகுப்பு சரோஜினி டீச்சர் அழகாகப் பாடம் நடத்துவார். அழகாகவும் இருப்பார். நான் படித்தது இருபாலர் பள்ளி; வகுப்பிலும் அப்படித்தான்! ‘உங்களுக்கு யாரை ரொம்ப ரொம்பப்பிடிக்கும்?’ என்று சரோஜினி டீச்சர் வரிசையாக ஒவ்வொருவரையாகக் கேட்டார். அப்போது பெண் வரிசையில் இருந்து என்னைப் பார்த்தவள், கூர்ந்து கவனித்தாள்.’உம்பேரைத்தான் சொல்லப்போறேன்’ என்று ஜாடையில் சொன்னேன்.  மிரண்டுபோய், முகமே வெளிறிவிட்டது அவளுக்கு! ‘வேணாம்டா, சொல்லிடாதேடா’ என்று கண்களாலும் உதடுகளாலும் லேசான கண்ணீராலும் கெஞ்சினாள். அந்தக் கெஞ்சல் இன்னும் அவளைக் கொஞ்ச வைத்தது. சீண்டிப் பார்க்கத் தூண்டியது.

பாவம்... இந்தமுறை கைகூப்பி கெஞ்சத் தொடங்கினாள். ரெண்டு கன்னத்தைத் தொட்டு, சந்தனம் இட்டுக்கொள்வது போல் ஜாடை காட்டி, அவளின் கன்னம்தான் என்று சைகையில் சொன்னதையெல்லாம் ரசிக்கவே இல்லை. கொஞ்சம் விட்டால், ‘ரெண்டு கன்னம் சந்தனக்கிண்ணமா உனக்கு? வெளியே வாடா... என் அப்பாகிட்டயே சொல்றேன்’ என்று சொல்லிவிடுவாளோ என்று எனக்கு உள்ளுக்குள் வியர்த்தது.

சரோஜினி டீச்சர் ‘ராம்ஜி, நீ சொல்லுடா’ என்றார். எழுந்தேன். நோட்டுப்புத்தகங்களை சரிசெய்வது போலவும் சட்டையை சரிசெய்வதுபோலவுமாக, நிமிஷங்களை எடுத்துக்கொண்டேன். ‘ரெண்டு கன்னம் சந்தனக்கிண்ணம்’ பாட்டை அன்னிக்கு பாடினியே... இப்பவும் பாடப் போறியாடா. கொன்னுருவேன்’ என்று செல்லமாக அதட்டினார். கேட்ட கேள்விக்கு என் பதிலைச் சொன்னேன். அவள் மறுஜனனம் எடுத்திருந்தாள்.

சரோஜினி டீச்சர் வகுப்பிலிருந்து கிளம்பியதும் ‘பூவை கையில் பூவை அள்ளிக்கொடுத்தபின்னும் தொட்டுத்தந்த கையில் மணம் வீசிது இன்னும்...’ என்று சத்தமாகப் பாட, அவள் உட்பட எல்லோருமே சிரித்தோம்; மகிழ்ந்தோம்; குதூகலித்தோம்; இளம்பருவத்தை இனிமையாகக் கழித்தோம்!

அந்தப் பெண்ணின் பெயரை அப்போதும் சொல்லவில்லை; இப்போதும் சொல்லப்போவதில்லை! ஆனால் ’எடுத்துக்கொடுக்கையிலே இரு விரல் மோதும் நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்’ என்ற வைரமுத்துவின் இந்தப் பாடலுக்குள்ளேயும் வரிகளுக்குள்ளேயும் உங்களுடைய டீன் ஏஜ் நினைவுகளும் நிரம்பியிருக்கலாம்; அதை இப்போது இந்தப் பாடல் நிமிண்டிவிட்டிருக்கும்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow