எனது தந்தை ராஜீவ் காந்தியின் மரணம் தற்செயலாக நடக்கவில்லை... ராகுல் காந்தி அதிர்ச்சித் தகவல்!
ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு நீக்கப்பட்டது அவரைக் கொல்வதற்காகவே என ராகுல் காந்தி தெரிவித்ததாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது
ராஜீவ் காந்தி, 1991-ஆம் ஆண்டு மே 21 அன்று, தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழகத்திற்கு வந்தபோது, சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப்படை நடத்திய குண்டுவெடிப்பில் மரணமடைந்தார்.
அவரது மரணம் உலகையே நிலைகுலையச் செய்தது. இந்த நிலையில், தந்தையின் மரணம் குறித்து ராகுல் தற்போது கூறியுள்ள தகவல் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சோனியா காந்தியின் சுயசரிதை நூலான "Belonging: A Journey of Love" அண்மையில் வெளியானது.இதனைத் தொடர்ந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இணைந்து உரையாடல் நிகழ்வு ஒன்றை மேற்கொண்டனர்.இந்த உரையாடல் நிகழ்வின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள செய்திகள் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. ராஜீவ் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எதிர்கொண்ட பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து சோனியா காந்தி உரையாடலில் குறிப்பிட்டுள்ள தகவல் என்னவென்றால்...
“ராகுல் வீட்டிற்குத் திரும்பிய அதே நேரத்தில் என் கணவர் சுற்றுப்பயணத்திற்குக் கிளம்பினார். பிகாருக்குச் சென்ற அந்தப் பயணத்தின்போது, ராஜீவ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.அவர் திறந்த ஜீப்பில் சென்றுகொண்டிருந்தபோது, அவர் மீது கற்கள் வீசப்பட்டன.
முறையான பாதுகாப்பு இல்லாத சூழலில், பாஜக அல்லது எதிர்க்கட்சியினர் ஆட்சியில் உள்ள மாநிலத்திற்குச் செல்லும்போது, அங்குள்ள பொறுப்பாளர்கள் முறையான பாதுகாப்பு வழங்குவதில் அக்கறை காட்டுவதில்லை.அவர் தானே வருகிறார் என்று அலட்சியமாக இருந்துவிடுவார்கள் என்று கூறினார். மேலும், ‘அது மிக மோசமான சுற்றுப்பயணமாக இருந்தது. அந்தப் பயணம் முழுக்க ராகுல் தந்தையுடனேயே இருந்தார்.அவரது தந்தைக்கு எதிராக மக்கள் கூச்சலிடுவதையும் அவர் நேரில் கண்டார். வீட்டிற்குத் திரும்பியதும் ராகுல் என்னிடம், ‘அப்பாவின் பாதுகாப்பு விஷயத்தில் நாம் ஏதும் செய்யாவிட்டால், அவரது இறுதிச் சடங்கிற்காகத்தான் நான் மீண்டும் வீட்டிற்கு வர வேண்டியிருக்கும்’ என்று சொன்னார்” என சோனியா காந்தி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “அந்த பிகார் பயணமே ஒரு இறுதிக்கட்ட நிகழ்வாக அமைந்தது. அதைப்பற்றி நான் முன்பிருந்தே சொல்லிக்கொண்டிருந்தேன். அதுபற்றி எனது நிலைப்பாடு தெளிவாக இருந்தது. என் தந்தையின் பாதுகாப்பு நீக்கப்பட்டது, அவரைக் கொல்வதற்காகவே செய்யப்பட்டது.அவர் கொல்லப்படுவதற்கான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அது தெளிவாகத் தெரிந்தது. அதுபற்றி என் தந்தை மற்றும் தாயிடம் சொன்னேன். அவருடன் இதுபற்றி விவாதம்கூட செய்திருக்கிறேன்” என்று ராகுல் காந்தி உணர்ச்சிகரமாகப் பேசினார்.
இது தொடர்பாகப் பிரியங்கா காந்தியும் சில தகவல்களைக் கூறியுள்ளார்.
இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, சோனியா காந்தி ராஜீவ் விஷயத்தில் மிகுந்த அச்சமும் கவலையும் கொண்டிருந்ததாகப் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.தங்களின் வீட்டைச் சுற்றியுள்ள முள்வேலிகளைச் சரிபார்ப்பதும், காவலர்கள் தூங்குகிறார்களா என்று கவனிப்பதுமாகவே அவர் இருந்ததாகப் பிரியங்கா குறிப்பிட்டார். ராஜீவ் காந்தி மரணம் தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் அவ்வப்போது சில கருத்துகளைக் கூறுவதுண்டு.
அவை பெரும்பாலும் அவர்களது மனவலியை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கும். இந்த நிலையில், முதல் முறையாக ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே அவரது பாதுகாப்பு நீக்கப்பட்டதாக ராகுல் கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.“என் அறை வீட்டின் முற்பகுதியில் இருந்தால், இவை அனைத்தும் எனக்குத் தெரியும். என் தந்தையின் காலடிச் சத்தம் கேட்கும் வரை என்னால் நிம்மதியாகத் தூங்க முடியாது” என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பாதுகாப்புக் குறைபாடு ஒரு குற்றச்சாட்டாக இன்றளவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே அவரது பாதுகாப்பு நீக்கப்பட்டதாக ராகுல் தற்போது தெரிவித்திருப்பது தேசிய அளவில் மீண்டும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.
What's Your Reaction?