கொங்குமண்டலம் யாருக்கு : கவுண்டர் வாக்குகளுக்கு திமுக, அதிமுக, தவெக கடும் போட்டி
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொங்குமண்டலத்தில் உள்ள கவுண்டர் வாக்குகளை யார் தங்கள் பக்கம் இழுப்பது என திமுக அதிமுக தவெக ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
10 மாவட்டங்களை கொண்ட கொங்குமண்டலத்தில் 44 தொகுதிகள் உள்ளன. யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக கவுண்டர் சமுதாய வாக்குகள் உள்ளன. கொங்குமண்டலத்தை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டையாக தொடர்ந்து பார்க்கப்படுகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் அது நிரூபணம் ஆனது.
செந்தில்பாலாஜி கொங்குமண்டலத்தில் பொறுப்பாளராக ஸ்டாலின் நியமித்தார். இதற்கு பிறகு கொங்குமண்டல திமுக வசம் சற்று திரும்பியது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து பிரிந்து தவெக சென்றுள்ள செங்கோட்டையன் கவுண்டர் வாக்குகளை குறிவைத்து அமைப்பு செயலாளராக விஜய் நியமித்துள்ளார்.
இதனால் கவுண்டர் சமுதாய வாக்குகளை யார் தங்கள் வசம் இழுப்பதுஎன்பதில் முன்று கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கவுண்டர் வாக்குகளை தக்க வைத்து கொள்ள திமுக கொங்குமண்டலத்தில் வியூகம் வகுத்துள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கே.எஸ்.ராஜ் கவுண்டர் தலைமையில் புதிய திராவிட கழக மாநாடு நடந்துள்ளது. 30 கவுண்டர் சமுதாய அமைப்புகளின் தலைவர், நிர்வாகிகள் ஒன்று கூடி மாபெரும் மாநாட்டை நடத்தி முடித்து இருக்கிறார். இந்த மாநாட்டில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் முத்துசாமி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
கவுண்டர் சமுதாய வாக்குகளை இழுப்பதற்காக திமுக மேற்கொண்டுள்ள முதற்கட்ட முயற்சி என கொங்குமண்டலத்தில் பரவலாக பேசப்படுகிறது.
What's Your Reaction?

