100 கோடி உயிர்களைப் பறிக்குமா AI?..மனித குலத்துக்கு பில் கேட்ஸ் விடுத்த எச்சரிக்கை!

கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மனித குலத்துக்குப் போரபத்தை ஏற்படுத்தும் என்று பில்கேட்ஸ் எச்சரித்துள்ள நிலையில், AI-யை ஆயுதங்கள், பயோஆயுதங்கள், சைபர் தாக்குதல்கள் மற்றும் டீப் ஃபேக் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க உலகளாவிய கட்டுப்பாடுகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Oct 5, 2026 - 16:00
100 கோடி உயிர்களைப் பறிக்குமா AI?..மனித குலத்துக்கு பில் கேட்ஸ் விடுத்த எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) இன்று மனித குலத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியாக உருவெடுத்துள்ளது. மருத்துவம், கல்வி, தொழில் உற்பத்தி எனப் பல துறைகளில் இது பெரும் மாற்றங்களை உருவாக்கி வரும் அதே வேளையில், கட்டுப்பாடற்ற அதன் வளர்ச்சி மனித குலத்தின் மூச்சடைக்கச் செய்யும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது. 

இதையேதான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் அண்மையில் மிகக் கடுமையான எச்சரிக்கையாக உலகிற்கு விடுத்துள்ளார்.

NBC தொலைக்காட்சியின் மீட் தி பிரஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற பில் கேட்ஸ், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்திற்கு உடனடியாக சட்டப்பூர்வ கட்டுப்பாடுகளும் அரசுகளின் கண்காணிப்பும் தேவை' என்று வலியுறுத்தியுள்ளார். தவறான நபர்களின் கைகளில் செயற்கை நுண்ணறிவு கிடைக்கும்போது, அது நூறு கோடி மக்களின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைவதோடு, கற்பனை செய்ய முடியாத பேரழிவுகளைச் சமூகத்தில் ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

தீய எண்ணம் கொண்ட மனிதர்களும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு கருவிகளும் இணையும்போது உருவாகும் ஆயுதத்தைப்போல மனித ஆபத்தானது வரலாற்றிலேயே இதுவரை உருவானதில்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களைத்தானே சுயகட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை இனி பலன் தராது என்றும், அரசுகளும் சட்ட அமலாக்கத் துறையும் உடனடியாக இதில் தலையிட்டு தகுந்த விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது வெறுமனே கற்பனையான அச்சம் அல்ல என்பதற்கு முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆந்திரோபிக் வெளியிட்ட புலனாய்வு அறிக்கை நேரடிச் சான்றாக அமைந்துள்ளது.

தங்களின் க்ளாட் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பல்வேறு குற்றவாளிகள், அரசு ஆதரவு பெற்ற குழுக்கள், உளவு மென்பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்ய முயன்றார்கள் என்பதை ஆந்திரோபிக் அம்பலப்படுத்தியுள்ளது. முக்கியமாக, ஐந்து வெவ்வேறு ஆய்வுகளில் விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு நெறிமுறைகளை ஏமாற்றி உயிரியல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக, டெங்கு, மலேரியா போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சிக்கன்குனியா வைரஸ் தொடர்பான ஆய்வுக்கு ஒரு விஞ்ஞானி செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளார். தடுப்பூசி தயாரிக்கப் பயன்படும் இத்தகைய ஆய்வுகள், தவறான கைகளுக்குச் செல்லும்போது மிகக் கொடிய பயோ ஆயுதங்களாக மாறும் அபாயம் உள்ளது. மேலும், ஏமன் போன்ற பகுதிகளில் செயல்படும் சில குழுக்கள் ஏவுகணைகள், குண்டுகள், ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட வழக்கமான போராயுதங்களுக்கான மென்பொருள்களை உருவாக்கவும் முயன்றுள்ளன.

தவிர, ரஷ்ய உளவு அமைப்புகள் நடத்திய இணையத் தாக்குதல்கள் மற்றும் அதிநவீன சைபர் ஹேக்கிங் முறைகளுக்கும் நுண்ணறிவு செயற்கை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள உய்கர் சமூகத்தினரைக் கண்காணிக்க சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதும், உள்நாட்டு அரசியல் எதிர்ப்பாளர்களை வேவு பார்க்க உளவு மென்பொருள்கள் தயாரித்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய கணக்குகளை உடனடியாகத் தடை செய்திருந்தாலும், சரியான பாதுகாப்பு வழிமுறைகள் இல்லையென்றால் பேரழிவு முடிவுகளுக்கே வழிவகுக்கும் என ஆந்திரோபிக் எச்சரித்துள்ளது.

இந்த AI நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஆராய்ச்சியாளர்களோ, 'இந்த வேலையே வேண்டாம். ஆளை விடுங்கள்' என பணியிலிருந்து விலகி வருகின்றனர். கடந்த வாரம், ஆந்திரோபிக் மற்றும் ஓப்பன் ஏஐ ஆகிய முன்னணி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றிய ஜேக்கப் காக்சன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியிட்ட குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

நிறுவனங்கள் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய காக்சன், செயற்கை நுண்ணறிவுத் துறையில் பணியாற்றுபவர்கள் இதன் அதிவேக வளர்ச்சியைக் கண்டு உண்மையிலேயே அச்சமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

'தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களின் உயிரோடு விளையாடுகின்றன. இந்தத் தசாப்தத்தின் இறுதிக்குள் செயற்கை நுண்ணறிவு மனித குலத்தையே அழித்துவிடும் என்று அதை உருவாக்குபவர்களே தீவிரமாக நம்புகிறார்கள்" என அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் ஆந்திரோபிக் நிறுவனத்தின் தலைவர் டேரியோ அமோடெய், 'செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியைக் குறைக்க வேண்டும்' என்றும், தன்னிச்சையான தணிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் தேவை என்றும் அண்மையில் வலியுறுத்தினார். ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் மற்றும் xAI நிறுவனத்தின் எலான் மஸ்க் ஆகியோரும் இக்கோரிக்கையை ஆதரித்துள்ளனர்.

ஒருவேளை கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால், செயற்கை நுண்ணறிவுப் பாட்களின் 'சூப்பர் கம்ப்யூட்டர் இணையத்தை முழுமையாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது என்ற அமோ டெய்யின் எச்சரிக்கையைச் சுட்டிக்காட்டிய காக்சன், அடுத்த ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் இது நிஜமாக வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார்.

இது நடந்தால், இணையம் முழுவதும் அதன் ராஜ்ஜியம்தான். பல தளங்களை அழிப்பது. பங்குச் சந்தைகளில் ஊடுருவது, அத்தியாவசிய செயல்பாடுகளை முடக்குவது என பேரழிவு தான். மேலும், 'டீப் ஃபேக்' வீடியோக்களும் குரல் பதிவுகளும் சமூகத்தில் பெரும் கலவரங்களைத் தூண்டக்கூடும். ஜனநாயகத் தேர்தல்களைச் சீர்குலைக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், தானாகவே இலக்குகளைத் தீர்மானித்துத் தாக்கும் ட்ரோன்கள் மற்றும் ரோபோட் ஆயுதங்கள் போர்க்களங்களில் அறிமுகமாவது மனிதநேயத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த சர்வதேச அமைப்புகள் இருப்பதுபோல, செயற்கை நுண்ணறிவு மூலமாக பயோ ஆயுதங்கள், ஏவுகணைகள் வடிவமைக்கப்படுவதைத் தடுக்க உலகளாவிய கண்காணிப்பு அமைப்பு அவசியம்.

பயோஆயுதங்கள், ஏவுகணை வடிவமைப்புகள் மற்றும் உளவு அமைப்புகளுக்குச் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் இந்த அவலநிலை, பில் கேட்ஸ் விடுத்த எச்சரிக்கையை உறுதிப்படுத்துகிறது. உலகத் தலைவர்களும் சட்ட அமைப்புகளும் உடனடியாக விழித்துக்கொண்டு விசேஷ கட்டுப்பாடுகளை விதிக்கத் தவறினால், மனித சமுதாயம் தன் சொந்தக் கண்டுபிடிப்பாலேயே பெரும் பேரழிவைச் சந்திக்க நேரிடும் நாள் வெகு தொலைவில் இல்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow