த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து... உதயநிதியை போல் கைதாவாரா ஆர்.பி.உதயகுமார்..?

நடிகை த்ரிஷா குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுத்தது போல் இவர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Aug 12, 2026 - 08:36
த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து... உதயநிதியை போல் கைதாவாரா ஆர்.பி.உதயகுமார்..?

தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஆர்.பி. உதயகுமார், காவிரி நீர் விவகாரத்தை ஒப்பிட்டு த்ரிஷா தொடர்பாக விமர்சனம் செய்திருந்தார். அதாவது, ”காவிரி தண்ணீருக்காக போராடாமல் எங்கள் அண்ணி த்ரிஷாவிற்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் போராட்டம் நடத்தின” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும், சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை கிண்டலடிக்கும் வகையிலும் அவர், முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டாமா, எதையோ பறிகொடுத்ததை போல் உட்கார்ந்து இருக்கிறார் என விமர்சித்தார். அப்போது கூடியிருந்தவர்களில் சிலர் நடிகை த்ரிஷாவின்  பெயரை சொல்ல, "எங்கள் அண்ணனுக்கு தெரிந்தது எல்லாம் அந்த நடிகை மட்டும்தான்" என ஆர்.பி.உதயகுமார் சிரித்துக் கொண்டே பேசினார். ஆர்.பி.உதயகுமார் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து த்ரிஷா ரசிகர்கள் மற்றும் நற்பணி மன்றத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் த்ரிஷாவுக்கு ஆதரவாக கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. த்ரிஷா குறித்து அவதூறாக பேசுவதை ஏற்க முடியாது என்றும், இதுபோன்ற கருத்துகள் தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த போஸ்டர்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த பரபரப்பு ஓய்வதற்குள், ஆர்.பி. உதயகுமார் மீண்டும் த்ரிஷாவை மையப்படுத்தி தமிழ்நாடு அரசின் நியமனங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அவர் வெளியிட்ட வீடியோவில், தமிழ்நாடு அரசில் திரைப்படத் துறையைச் சேர்ந்த சிலருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார்.

குறிப்பாக, திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் அரசுப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருப்பதை குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் விஜய்யுடன் திரைப்படங்களில் பணியாற்றியவர்களுக்கு அரசு பதவிகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாகவே, நடிகை த்ரிஷாவுக்கு துணை முதலமைச்சர் பதவி எப்போது வழங்கப்படும் என கிண்டலாக கேள்வி எழுப்பினார். செத்த நேரம் சும்மா இரும்மய்யா என்று எடப்பாடியாரே அலறும் அளவிற்கு ஆர்.பி. உதயகுமாரின் பேச்சு அமைந்துள்ளதாகவும், இதனால் ஒரு பெண்ணை தலைமையாக கொண்ட கட்சியான அதிமுகவிற்கு தான் பின்னடைவு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஆர்.பி. உதயகுமாரின் இந்த தொடர் விமர்சனங்கள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், அவர் மீது தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முன்னதாக நடிகையின் பெயரையே குறிப்பிடாமல் இருந்தும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பரபர என ஆக்ஷன் எடுத்தது  காவல்துறை. ஒரே நாளில் கைது செய்து தஞ்சாவூர் வரை அழைத்துச் சென்று, கைது நடவடிக்கையெல்லாம் இல்லை இதுவெறும் விசாரணை தான் என்று அரசியல் களத்தில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. இதனை சுட்டிக்காட்டும் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக வலைதள பயனர்கள், அதேபோன்ற சட்ட நடவடிக்கை ஆர்.பி. உதயகுமார் மீதும் எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எனினும், ஆர்.பி. உதயகுமார் மீது இதுவரை காவல்துறை தரப்பில் கைது அல்லது வழக்குப்பதிவு தொடர்பாக அதிகாரப்பூர்வ வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவரது பேச்சு தொடர்பாக அடுத்தகட்டமாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow