“துரோகம் மறக்காது!” அதிமுகவுக்கு டாடா காட்டிய முன்னாள் MLA... தவெகவில் திடீர் ஜம்ப்!

அதிமுக தலைமையின் மீது அதிருப்தி தெரிவித்து கட்சியில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ. முருகுமாறன், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

Oct 4, 2026 - 18:37
“துரோகம் மறக்காது!” அதிமுகவுக்கு டாடா காட்டிய முன்னாள் MLA... தவெகவில் திடீர் ஜம்ப்!

காட்டுமன்னார்கோயில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான என். முருகுமாறன், அக்கட்சியில் இருந்து இன்று விலகினார். தொடர்ந்து, தாராபுரத்தில் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

அதிமுக தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த முருகுமாறன், தனது விலகல் குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில், அதிமுகவில் தற்போதைய தலைமையை நம்பி பாதிக்கப்பட்டவர்களில் தானும் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தலில் பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். உழைத்தவர்களை புறக்கணித்துவிட்டு, புதிதாக வருபவர்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்தால் தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அந்தத் தொகுதியை தனக்கு ஒதுக்காமல் தலைமை முடிவு செய்தது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் முருகுமாறன் தெரிவித்துள்ளார்.

மாணவப் பருவம் முதல் அதிமுகவில் பணியாற்றி வந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்தக் கட்சியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டிருப்பது மனதுக்கு வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக தன்னை வளர்த்த கட்சி என்ற நினைவு என்றும் தன்னிடம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

யார் இந்த முருகுமாறன்?

என். முருகுமாறன் கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு பதிலாக திட்டக்குடி (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளராக அவர் களமிறக்கப்பட்டார்.

அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் சி.வி. கணேசன் 63,106 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் ராஜசேகர் 60,477 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் 42,502 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்த முருகுமாறன், தற்போது கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்குள் கவனம் பெற்றுள்ளது.

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் வரிசையில் தற்போது முருகுமாறனும் இணைந்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow