“நிதி தர முடியாதுன்னா சொல்லிடுங்க?”... பாரதிதாசன் விவகாரத்தில் தவெக அரசை சாடிய ஸ்டாலின்!

மலேசியா மாணவர் பாரதிதாசனின் கல்விக்காக தமிழ்நாடு அரசு நிதி வழங்காதது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Sep 18, 2026 - 07:36
“நிதி தர முடியாதுன்னா சொல்லிடுங்க?”... பாரதிதாசன் விவகாரத்தில் தவெக அரசை சாடிய ஸ்டாலின்!
Bharathidasan issue

மலேசியாவில் மருத்துவ ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் தமிழ்நாடு மாணவர் பாரதிதாசன், உதவித்தொகை கிடைக்காததால் தனது கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மாணவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

மாணவர் பாரதிதாசன் வெளியிட்ட வீடியோவில், “ஏப்ரல் மாதம் முதல் உதவித்தொகை கேட்டு வருகிறேன். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. பணம் செலுத்தாததால் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக மருத்துவ ஆராய்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆய்வகப் பொருட்கள் வாங்குவதற்கும் நிதி இல்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், “பணம் இல்லாத காரணத்தால் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவ கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

சமூக நீதித்துறை அதிகாரிகள் தன்னை தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், வரலாற்றில் ரோஹித் வெமுலாவுக்கு ஏற்பட்டது போன்ற சூழல் தனக்கும் ஏற்படுவதாகவும் பாரதிதாசன் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்ட பதிவு

மாணவர் பாரதிதாசனின் வீடியோ குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. அவர் கேட்பது உதவி அல்ல; அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தால் ஒரு மாணவரின் பல ஆண்டுகால உயர்கல்வி கனவு பாதிக்கப்படக்கூடாது. எங்களுக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும், த.வெ.க. அரசு மீது இதுபோன்ற அவப்பெயர் ஏற்படக்கூடாது என்பதே என் வேண்டுகோள்” என கூறியுள்ளார்.

கல்விக் கட்டணத்தை ஏற்கத் தயார்: ஸ்டாலின்

மாணவர் பாரதிதாசனுக்குத் தேவையான நிதியை வழங்க முடியாத நிலை இருந்தால், அதை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், “தேவையான நிதி கிடைக்கவில்லை என்றால் திமுகவும், தமிழ்நாட்டு மக்களும் இணைந்து அந்த மாணவரின் கல்விக் கட்டணத்தை செலுத்தி படிக்க வைப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர் கூறிய குற்றச்சாட்டு

பாரதிதாசன் தனது வீடியோவில், ஆராய்ச்சிக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசு தரப்பில் இருந்து “இந்த பொருட்களை ஆராய்ச்சிக்காகத்தான் வாங்கினீர்களா?” என மீண்டும் விளக்கம் கேட்டு மின்னஞ்சல்கள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது தமிழ்நாடு அரசியல் மற்றும் மாணவர் நலன் தொடர்பான விவாதமாக மாறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow