இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு ...கோவை, நீலகிரி மெயின் ஸ்பாட் !

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Aug 24, 2026 - 15:29
இரண்டு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு ...கோவை, நீலகிரி மெயின் ஸ்பாட் !
today weather alert

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 24) மற்றும் நாளை (ஆகஸ்ட் 25) ஓரிரு இடங்களில் கனமழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் தற்போது பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

கோவை, நீலகிரியில் கனமழை:

ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

மழையின் போது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மலைப்பகுதிகளில் பயணம் மேற்கொள்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

பல மாவட்டங்களில் மிதமான மழை:

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுச்சேரியிலும் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஏனைய பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மாலை நேரத்தில் மழை?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளையும் இதேபோன்ற வானிலை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை:

ஆகஸ்ட் 24 முதல் 26ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும், இந்த காலகட்டத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மீனவர்களுக்கும் முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 24 முதல் 28ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

இந்தப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வானிலை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow