தவெக வளர்ச்சி… திமுக முன்னேற்றம்… அதிமுக பின்னடைவு ! யார் யாருக்கு என்ன லாபம் !

இரண்டு தொகுதிகளில் தவெக பெற்ற வெற்றி, திமுகவின் முன்னேற்றம், அதிமுகவின் பின்னடைவு எனத் தமிழ்நாடு அரசியலில் புதிய கணக்கை உருவாக்கியுள்ள இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின்னால் இருக்கும் முக்கிய மாற்றங்கள் என்ன?

Oct 10, 2026 - 12:35
தவெக வளர்ச்சி… திமுக முன்னேற்றம்… அதிமுக பின்னடைவு ! யார் யாருக்கு என்ன லாபம் !
TVK vs DMK vs AIADMK: Who Gained ?

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தவெக மகத்தான வெற்றியை பெற்றிருந்தாலும், இதில் யாருக்கு என்ன லாபம், கடந்தகால தேர்தல் முடிவுகளை மாற்றிக் காட்டியவர்கள் யார் என்பதை அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு..

மதுராந்தகம், தாராபுரம் இந்த 2 தொகுதிகள்தான், தமிழக அரசியலை மீண்டும் பரபரப்பு களமாக மாற்றியிருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே தவெக சந்தித்த முதல் தேர்தல் எனும் நிலையில், அது அக்னிப்பரீட்சை வெற்றியாக முடிந்திருக்கிறது. மதுராந்தகம் தொகுதியில், தவெக, திமுக, அதிமுக என மும்முனை போட்டி இருந்ததை தேர்தல் முடிவு காட்டுகிறது.

கடந்த தேர்தலை ஒப்பிடும்போது மதுராந்தகத்தில் தவெக, தனது வாக்குகளை அதிகரிக்கச் செய்திருக்கிறது. 2026 பொதுத் தேர்தலில் "29.20 சதவீத" வாக்குகள் பெற்ற தவெக, இந்த இடைத்தேர்தலில் "39.96 சதவீத" வாக்குகளை பெற்று வெற்றிக்கனியை ருசித்திருக்கிறது.

முதலமைச்சரின் தீவிர பிரசாரம், தவெக தொண்டர்களின் உழைப்பு, கூட்டணி கட்சிகள் ஆதரவு, பாமக போட்டிக்குள் வராமல் இருந்தது இவை எல்லாம் வெற்றிக்கு ஒரு காரணியாக உள்ளது.

மதுராந்தகத்தில் திமுகவை எடுத்துக்கொண்டால், கடந்த தேர்தலில் "28.14 சதவீத" வாக்குகளை பெற்று 3வது இடத்தில் இருந்தது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் அதைவிடக் குறைவாக "29.14 சதவீத" வாக்குகளை பெற்றாலும் 2ஆம் இடத்திற்கு வந்துள்ளது. கூட்டணி கட்சிகள் இல்லாமல் போட்டியிட்ட திமுக, 2வது இடத்திற்கு வந்திருப்பதை அவர்கள் அரசியல் வெற்றியாக பார்க்கிறார்கள். இதில் சிறுபான்மையினர் திமுகவுக்கு அதிகளவு சென்றிருப்பது, அவர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

இந்த 2 கட்சிகளைவிட, மதுராந்தகத்தில் 2 முறை வெற்றியை தன்வசம் வைத்திருந்த அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. பொதுத்தேர்தலில் "32.58 சதவீத" வாக்குகளை பெற்ற அதிமுக, இந்த முறை "25.60 சதவீத" வாக்குகளையே பிடித்திருக்கிறது. தவெக, திமுகவுக்கு இடையேயான போட்டியிடுல் அதிமுக ஓரங்கப்பட்டாலும், சொந்த கோட்டையில் தோற்பது பெரும் பின்னடைவாக இருக்கிறது.

மதுராந்தகம் போலவே தாராபுரத்திலும் 3 முனை போட்டி இருந்ததை, பரபரப்பான தேர்தல் முடிவு காட்டியிருக்கிறது. கடந்த முறை "23.23 சதவீத" வாக்குகளை பெற்ற தவெக, இந்த முறை "37.02 சதவீத" வாக்குகளை தன்வசம் இழுத்திருக்கிறது. கடுமையான எதிர்ப்புகள், விமர்சனங்கள் இருந்தபோதும், ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளரை களம் இறக்கியபோதும், தீவிர பிரசாரம் மற்றும் தேர்தல் யுக்திகள் மூலம், அதிமுக கோட்டையை தவெகவின் கோபுரமாக மாற்றியிருக்கிறார்கள்.

கடந்த முறை "32.20 சதவீத" வாக்குகளை பெற்ற திமுக, இந்த முறை அதைவிட சற்று குறைவாக "31.78 சதவீத" வாக்குகளை பெற்றிருக்கிறது. ஆனால், 3ஆம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு வந்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. அதிமுக கோட்டை, முதலமைச்சர் விஜய்க்கான வாக்குகள் என இரண்டையும் தாண்டி நாங்களும் போட்டியில் இருக்கிறோம் என்பதை நிரூபித்திருக்கிறது.

கட்சியின் கோட்டை, வெற்றி பெற்ற தொகுதி, இரட்டை இலை செல்வாக்கு என அனைத்து வாய்ப்புகள் இருந்தும், இந்த தொகுதியை நழுவ விட்டிருக்கிறது அதிமுக. கடந்த தேர்தலில் "40.56 சதவீத" வாக்குகளை பெற்ற அக்கட்சி இந்த முறை "25.08 சதவீத" வாக்குகளுடன் 3ஆம் இடத்திற்கு பின்தங்கியிருக்கிறது. அப்படி இருந்தும்கூட 3 சுற்றுகளில் தவெகவுக்கு ஷாக் கொடுத்து, அதிமுக முன்னிலையில் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

கடந்தகால தேர்தல் முடிவுகளை தலைகீழாக மாற்றிய தவெக, இன்னும் தங்களை பலப்படுத்த வேண்டும், 2வது இடத்தை பிடித்த திமுக, தவெகவுக்கு எதிரான ஆயுதத்தை கூர்மைப்படுத்த வேண்டும், 3 இடத்தை பிடித்த அதிமுக, கட்சியில் உட்கட்டமைப்பு மாற்றங்களை செய்து, கரைந்து போகாமல் இருப்பதற்கான யுக்திகளை கையில் எடுக்க வேண்டும் என்பதுதான் இடைத்தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பாக இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow