தனுஷ் ரசிகர் மன்றத்தில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்... அரசியல் நகர்வா?

நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்குவாரா என்ற விவாதங்கள் அவ்வப்போது எழுந்து வரும் நிலையில், அவரது ரசிகர் மன்றத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருவது தற்போது கவனம் பெற்றுள்ளது.

Aug 28, 2026 - 17:59
Aug 28, 2026 - 18:03
தனுஷ் ரசிகர் மன்றத்தில் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம்... அரசியல் நகர்வா?

20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அகில இந்திய தனுஷ் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் பல்வேறு சமூக நல உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகளை தொகுதி வாரியாக ஒருங்கிணைக்கும் வகையில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி, ஆலங்குளம், நாங்குநேரி உள்ளிட்ட தொகுதிகளில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாநகரின் பல்வேறு பகுதிகளில் தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்ற சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகின்றன. தனுஷின் புகைப்படம் மற்றும் ரசிகர் மன்றத்தின் அடையாளங்களுடன் வெளியாகியுள்ள இந்த சுவரொட்டிகள் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சிலர் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் தொடர்பில் இருந்தாலும், தற்போது தொகுதி பொறுப்பாளர் என்ற அடையாளத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

இதனால், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தனுஷ் ரசிகர் மன்றம் தொகுதி வாரியாக தனது கட்டமைப்பை வலுப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில், ரசிகர் மன்றத்தின் நற்பணி மற்றும் சமூக செயல்பாடுகளை மேலும் திட்டமிட்டு நடத்துவதற்காகவே இந்தப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்கான கொடியை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருவதுடன், அவரது ரசிகர் மன்றக் கொடியுடன் சுவரொட்டிகளும் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுவது அரசியல் ரீதியான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

எனினும், தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, இந்த நடவடிக்கைகள் எதிர்கால அரசியல் களத்திற்கான முன்னேற்பாடுகளா அல்லது ரசிகர் மன்றத்தின் வழக்கமான செயல்பாடுகளை வலுப்படுத்தும் முயற்சியா என்பது தொடர்ந்து கேள்வியாகவே உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow