மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Nov 24, 2026 - 08:54
மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை.. 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் இருந்து மத்திய மேற்கு வங்கக் கடல் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.வடக்கு கேரளாவில் இருந்து கர்நாடகம் வரை கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இதர 29 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை டெல்டா மற்றும் தென் மாவட் டங்களில் மழைக்கு வாய்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக சென்னை கத்திவாக்கம், சைதாப்பேட்டை, எண்ணூர், மீனம்பாக்கம், மணலி புதுநகர், கடப்பாக்கம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் தலா 20 மில்லி மீட்டர் மழை பதிவானது.

வடகிழக்கு பருவமழை இம்முறை வேகமாகத் தொடங்கியபோதிலும், போதுமான மழைப்பொழிவு இல்லை. வங்கக் கடல் பகுதியில் அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவானபோதிலும், அவற்றின் மூலம் போதுமான மழை கிடைக்கவில்லை. இதனால், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மழை ஓய்ந்து, பனிப்பொழிவும் தொடங்கியதால், இனி மழைக்கு வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று இரண்டாவது நாளாக மழை பெய்து வருகிறது. இதன் மூலம் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்று கருதப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை மூலம் கூடுதலாக மழை கிடைத்தால், குடிநீர்த் தேவைக்கு பற்றாக்குறை இல்லாமல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow