தமன்னாவுக்காக சிபாரிசு செய்த ரஜினி... “நோ” சொன்ன நெல்சன்!

வரும் (அக்., 15-ம்) தேதி ஜெயிலர் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், நேற்று (அக்.,-9) நடைபெற்ற இப்படத்தின் சூப்பர் ஷோ நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் பேசிய உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Oct 10, 2026 - 11:30
தமன்னாவுக்காக சிபாரிசு செய்த ரஜினி... “நோ” சொன்ன நெல்சன்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, அதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் (அக்.,-15-ம்) தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக, ‘ஜெயிலர் 2 சூப்பர் ஷோ’ என்ற நிகழ்ச்சி நேற்று ( அக்.,-09)  மாலை 6 மணிக்கு சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியில் நெல்சன் எழுப்பிய கேள்விகளுக்கு ரஜினிகாந்த் சுவாரஸ்யமாகப் பதிலளித்தார். அப்போது, “நீங்கள் எப்போதும் தன்னடக்கத்துடனும் பணிவுடனும் இருக்கிறீர்களே... அதற்கு என்ன காரணம்? வேண்டுமென்றே அப்படி இருக்கிறீர்களா அல்லது இயல்பாகவே உங்களிடம் அந்த குணம் இருக்கிறதா?” என்று நெல்சன் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், “நான் சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், அதைவிட அதிகமாக நடத்துநர் வேலையை நேசித்தேன். பேருந்தில் ஐந்து ஆண்டுகள் நடத்துநராகப் பணியாற்றிய நாட்களை இன்றும் மிஸ் செய்கிறேன். அதனால், என் மனதில் நான் ஒரு கண்டக்டர் என்ற விஷயம் ஆழமாகப் பதிந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் இந்தப் பதில் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும், தனது கடந்த காலத்தையும் எளிமையான வாழ்க்கையையும் அவர் மறக்கவில்லை என ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஜெயிலர் 2 படத்தில் தமன்னாவுக்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பாக நெல்சனிடம் தான் பேசியதையும் ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்டார்.

“ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சூரஜ் என எல்லாருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள். படத்தில் ஒரே ஒரு மிஸ்ஸிங் தமன்னாதான். தமன்னாவை ஒரு பாடலில் வைத்துக்கொள்ளலாம் என்று நெல்சனிடம் சொன்னேன். அதற்கு, ‘சார், உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக வைத்துக்கொள்ள முடியாது’ என்று அவர் சொல்லிவிட்டார். ‘எனக்குப் பிடிக்கும் என்பதற்காகச் சொல்லவில்லை; மக்களுக்குப் பிடிக்கும் என்பதால்தான் கேட்டேன்’ என்று பதிலளித்தேன்” என ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினிகாந்தின் இந்தப் பேச்சும், நெல்சனுடனான கலகலப்பான உரையாடலும் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன. அக்டோபர் 15-ம் தேதி வெளியாகவுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow