பான் இந்தியா படமா இருந்தால் விஜய் தான் பிரதமர்.. 'யாதும் அறியான்' இயக்குநர் பேச்சு!

விஜய் முதல்வர் என குறிப்பிட்டு வெளியான ’யாதும் அறியான்’ படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகிய நிலையில், இதுக்குறித்து விளக்கமளித்துள்ளார் அப்படத்தின் இயக்குநர் எம்.கோபி.

பான் இந்தியா படமா இருந்தால் விஜய் தான் பிரதமர்.. 'யாதும் அறியான்' இயக்குநர் பேச்சு!
yadhum ariyaan director envisions vijay as prime minister

பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் உருவாகியுள்ள 'யாதும் அறியான்' திரைப்படம் வருகிற ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக நாயகன் தினேஷ் மற்றும் நாயகி பிரானா நடிப்பில், விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், இயக்குநர் பேரரசு, ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், நடிகர் சௌந்தரராஜன், படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுபாஷ், நடிகர்-இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு, நடிகர் சம்பத் ராம் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பலரும் தளபதி விஜய் பற்றியும், அரசியலில் அவரது இடம் பற்றியும் அதிரடியான கருத்துகளைப் பதிவு செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

'யாதும் அறியான்' திரைப்படத்தின் டிரைலரானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரைலரின் ஒரு ப்ரேமில் “தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு புது திட்டங்கள் என முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு” என ஒரு போஸ்டர் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் டிரைலர் வெளியான சமயத்தில் சமூக வலைதளத்தில் பேசுப்பொருளாகியது. இந்த காட்சியே படத்திற்கு நல்ல ப்ரோமோஷன் ஆகவும் அமைந்தது.

இதுக்குறித்து இயக்குநர் எம்.கோபி நிகழ்ச்சியில் பேசுகையில், "நான் இயக்கியுள்ள ’யாதும் அறியான்’ பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன்" என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், "எனது அடுத்தடுத்த படங்களில் விஜயின் ரெபரன்ஸ் கண்டிப்பாக இருக்கும்" என்றும் கூறி, தனது விஜய் மீதான பற்றை வெளிப்படுத்தினார்.

நடிகர் சௌந்தரராஜன் பேசுகையில்,  "அரசியலும், கலையும் இல்லாமல் மனிதர்களின் வாழ்க்கை முழுமை அடையாது" என்று குறிப்பிட்டார். மேலும்,  'யாதும் அறியான்' படத்தில் இடம்பெற்ற "இலவசம் இருக்கக் கூடாது, தமிழக முதல்வர் விஜய்" என்ற போஸ்டர் தான் உலக அளவில் இந்தப் படத்திற்குக் கவனம் பெற்றுத் தந்தது என்றார். "தளபதி விஜய் என்பது வெறும் பெயர் இல்லை, ஒரு கோடி பேரின் உயிர், அதில் நானும் ஒருவன்" என்று நெகிழ்ச்சியுடன் பேசிய அவர், 2026-ல் விஜய் முதல்வராவது உறுதி என்றும், இலவச கலாச்சாரம் தனக்குப் பிடிக்காது என்றும் குறிப்பிட்டார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், " இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால், இயக்குநர் கோபி விஜய் சாரின் ரசிகர். நிகழ்ச்சிக்கு வருபவர்கள் விஜய் சாருடன் எதாவது தொடர்புடையவராக இருக்க வேண்டும் என்று. என்னையும் அந்த தகுதியால் தான் அழைத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வில் இருப்பவர்கள் அனைவரும் தளபதி விஜயின் ஆட்கள் தான்" என்று தெரிவித்தார்.  ”விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை, விஜய் தான் தனக்கு இரண்டு வாழ்க்கை கொடுத்தவர்” என்று கூறி நன்றி தெரிவித்த பேரரசு, இயக்குநர் கோபி விஜய் ரசிகராக இருப்பதால் தான் 2026 குறித்த கான்செப்ட்டை படத்தில் வைத்திருக்கிறார் என்றார். மேலும், ஒரு மாஸ் ஹீரோவை வைத்து படம் பண்ணும் போது, அந்த ஹீரோவை இயக்குநர் நேசிக்க வேண்டும், அப்போது தான் ரசிகர்களுக்கு பிடித்த படம் வரும் என்று பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow