தமிழ்த் திரையுலக வரலாற்றில் தன் சுவடுகளை பதித்தவர் சிஐடி சகுந்தலா.. தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவரது மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
சென்னை: பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா உடல் நலக்குறைவினால் காலமானார். அவருக்கு வயது 84.சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினராகவும், குறிப்பிடத்தகுந்த மூத்த திரைக்கலைஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்த சிஐடி சகுந்தலா அவர்கள்,17/09/2024 அன்று இயற்கை எய்தியது, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், எங்கள் உறுப்பினர்களுக்கும் ஈடு செய்ய இயலாத ஒரு பேரிழப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தின் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா சென்னையில் லலிதா, பத்மினி, ராகினி நடத்தி வந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். அப்போது கிடைத்த அறிமுகங்களின் மூலம் திரையுலகில் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். 1970ஆம் ஆண்டு ஜெய்சங்கர் நடிப்பில் வெளியான ’சிஐடி சங்கர்’ படத்தில் அறிமுகமானதால், அதன் பிறகு ‘சிஐடி’ சகுந்தலா என்று அழைக்கப்பட்டார்.
வில்லனாக அறிமுகமாகி நாயகனாக உயரும் நடிகர்களைப் போல, ஒரு நடன கலைஞராக அறிமுகமாகி, அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து கதாநாயகியாக உயர்ந்தவர் சிஐடி சகுந்தலா. சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெய்சங்கர் போன்ற முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். குறிப்பாக சிவாஜி கணேசனுடன் நடித்த தில்லானா மோகனாம்பாள், பாரதவிலாஸ், வசந்த மாளிகை உள்ளிட்ட பல படங்கள் காலத்தால் அழியாதவை.
‘படிக்காத மேதை’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘திருடன்’, ‘தவப்புதல்வன்’, ‘வசந்த மாளிகை’, ‘நீதி’, ‘பாரத விலாஸ்’, ‘ராஜராஜ சோழன்’, ‘பொன்னூஞ்சல்’, ‘என் அண்ணன்’, ‘இதயவீணை’ என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார்.
தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா.சினிமாவிலிருந்து விலகிய பிறகு சீரியல்களில் நடித்து வந்தார். அதன்பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு, நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிஐடி சகுந்தலா என்று மிகப் பிரபலமாக அழைக்கப்படும் அருணாச்சலம் சகுந்தலா அவர்கள், 1960-ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் கோலோச்சி, 600-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் கதாநாயகியாகவும், பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களிலும் திரையில் தனி முத்திரை பதித்தவர். திரையுலகில் நான்கு தலைமுறைகளைக் கடந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.
மக்கள் திலகம் திரு எம் ஜி ஆர் அவர்கள், நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்கள், மக்கள் கலைஞர் திரு ஜெய்சங்கர் அவர்கள் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்களோடு இன்றளவும் மனதில் நிற்கும் பல கதாபாத்திரங்களில் மிளிர்ந்து, தமிழ்த் திரையுலக வரலாற்றில் தன் சுவடுகளை பதித்தவர். காண்போரை கவர்ந்திழுக்கும் தனது நடனத் திறமையினாலும், நடிப்பு ஆற்றலாலும், ஆயிரக்கணக்கான ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்த்த பெருமைக்கு உரியவர்.
கைதி கண்ணாயிரம், படிக்காத மேதை, ஒளி விளக்கு, சி ஐ டி சங்கர், வசந்த மாளிகை, தவப்புதல்வன், பொன்னூஞ்சல், அன்பைத் தேடி, ரோஜாவின் ராஜா, அதிர்ஷ்டக்காரன், இமயம், வண்டிச்சக்கரம், புதிய ராகம் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் இவரது அற்புதமான நடிப்பின் மூலமாக ரசிகர்கள் நெஞ்சங்களில் நிரந்தரமாக குடி கொண்டவர். அன்பான இவரது அணுகுமுறையால் அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினராகவும், குறிப்பிடத்தகுந்த மூத்த திரைக்கலைஞர்களில் ஒருவராகவும் திகழ்ந்த சிஐடி சகுந்தலா அவர்கள்,17/09/2024 அன்று இயற்கை எய்தியது, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், எங்கள் உறுப்பினர்களுக்கும் ஈடு செய்ய இயலாத ஒரு பேரிழப்பாகும். அவர்தம் நினைவும், புகழும் என்றென்றும் திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீடித்து நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவருக்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க அவரது புகழ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?