அந்த இரண்டுல ஒன்றை நீக்கிடுங்க!: எலெக்ஷன் கமிஷனின் கறார் ஆர்டர்
சந்தேகம் இருப்பின் 1950 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்’ என்று ஹைலைட்டாக குறிப்பிட்டுள்ளார்.
தேசத்தின் அரசியல் திருவிழாவான ‘நாடாளுமன்ற தேர்தல் 2024’ பட்டாசுக்கு திரிகிள்ளப்பட்டு விட்டது. நாடெங்கிலும் அரசியல் கட்சிகள் கூட்டணி, மாற்று அணி என்று அதகளம் செய்ய துவங்கிவிட்டார்கள். இந்த சூழ்நிலையில் தேர்தலை தோளில் ஏற்றி நடத்தும் தேர்தல் ஆணையமும் தனது பணிகளை முழுவீச்சில் நடத்திக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், வாக்காளர் பட்டியல்கள் சரிபார்ப்பு பணிகள் பக்காவாக போய்க்கொண்டுள்ளன.இதில் மிக முக்கியமானதாக, எங்கேயாவது டபுள் எண்ட்ரி நடந்துள்ளதா? என்று பார்க்கப்படுகின்றன. அதாவது ஒரு நபருக்கு இரண்டு இடங்களில் ஓட்டுரிமை இருக்கிறதா? என்று பார்க்கப்படுகின்றன.
அப்படி அலசப்பட்டதில் கோவை மாவட்டத்தில் எண்பத்தி ஆறாயிரத்து எண்ணூற்று முப்பத்து ஆறு வாக்காளர்களுக்கு இரண்டு இடங்களில் ஓட்டுரிமை இருப்பது தேர்தல் ஆணையத்தில் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதாவது கோவை மாவட்டத்தின் பத்து சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் வரைவு பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.அதன்படி இம்மாவட்டத்தில் 30.49 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். இருந்தாலும் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் இறுதிப் பட்டியல் வரும் ஜனவரி 5ல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த பட்டியலில் உள்ள பல பிரச்னைகள் குறித்து ஆராயப்பட்டது. குறிப்பாக இரட்டை பதிவு பற்றி அலசப்பட்ட நிலையில்தான் மாவட்ட அளவில் மொத்தம் எண்பத்து ஆறாயிரத்து எண்ணூற்று முப்பத்து ஆறு வாக்காளர்களுக்கு இரட்டை வாக்குரிமை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் விரும்பும் ஒரு இடத்தில் மட்டும் ஓட்டுரிமையை வழங்கிவிட்டு, மற்றொன்று இடத்தில் பதிவை நீக்கிட உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சிய கிராந்தி குமார், அதில் ‘இரு இடங்களில் ஓட்டுரிமை இருக்கும் வாக்காளர்களின் முகவரிக்கு தபால் மூலம் படிவம் – ஏ அனுப்பப்படும். அதை பூர்த்தி செய்து, ஏழு நாட்களுக்குள் திரும்ப அனுப்ப வேண்டும். சந்தேகம் இருப்பின் 1950 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்’ என்று ஹைலைட்டாக குறிப்பிட்டுள்ளார். இரட்டை குழந்தைகள்! இரட்டை நாடி! எல்லாம் அழகுதான். ஆனால் இரட்டை வாக்குரிமை தப்பு பாஸு.
-ஷக்தி
What's Your Reaction?