ஊட்டியில் உறைபனி அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்: அதிகாரிகள் எச்சரிக்கை

உறைபனி மற்றும் தொடர் பனி பொழிவினால் தாவரங்கள் கருகுவதற்கு வாய்ப்புள்ளது! என்று எச்சரித்துள்ளனர்.

Dec 1, 2023 - 16:39
Dec 1, 2023 - 19:15
ஊட்டியில் உறைபனி அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்: அதிகாரிகள் எச்சரிக்கை

நீலகிரியில் இந்தாண்டு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என சூழலியல் ஆர்வலர்கள் கணித்துள்ளனர்

கடவுளின் தேசமான கேரளத்தில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் துவங்கிவிடும்.அங்கே மழை துவங்குகையில் அதன்  நீட்சியாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலும் பருவ மழை இருக்கும்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் ஜூன், ஜூலை மாதங்களில் நீலகிரி மற்றும் கோவை இரண்டுமே சிலுசிலுவென சாரலில் நனைந்து கொண்டே இருக்கும்.இதுதான் இயற்கையின் கொடை!

ஆனால் கடந்த ஜூனில் இந்த நிலை தலைகீழானது.கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தவறியதன் விளைவாக தமிழகத்தின் இவ்விரு மாவட்டங்களும் காய துவங்கின.அதிலும் செப்டம்பர், அக்டோபரில் கூட நீலகிரி மற்றும் கோவையில் கோடை கொளுத்தியது.அக்டோபரில் நிரம்பிட துடிக்கும் சிறுவாணி அணையோ இந்தாண்டு அதன் தரை தெரியுமளவுக்கு வறண்டது. 

இந்த நிலையில்தான் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியது. வழக்கமாக இந்த பருவ மழையானது நீலகிரி மற்றும் கோவையில் பெரியளவில் கைகொடுக்காது. ஆனால் இந்தாண்டு கேரளா மட்டுமில்லாமல் தமிழகத்தின் இரு மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கிவிட்டது. அதிலும் தீபாவளி வாரத்தில் அடித்ததெல்லாம் புயல் மழை. வெள்ளக்காடாகிப் போனது இரு மாவட்டங்களும். அதிலும் 20 தேதிக்கு பிந்தைய பொழிவில் நீலகிரியில் பிய்த்துக் கொண்டு  கொட்டியது வெள்ளம். ’நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வராதீங்க’ என்று மாவட்ட நிர்வாகமே வேண்டுகோள் வைக்குமளவுக்கு கொட்டிவிட்டது. 

சூழல் இப்படியிருக்க, இப்போது பனி மாதமான டிசம்பர் பிறந்துவிட்ட நிலையில், நீலகிரியில் அதிலும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்தாண்டு பனியின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்! என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதாவது பருவமழை மாறி அடித்திருக்கும் நிலையில், பனிப்பொழிவும் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது! குறிப்பாக உறைபனி நிலை அதிகரிக்கலாம்! இதனால் மனிதர்களுக்கு இருமல், காய்ச்சல், நெஞ்சு சளி கட்டுதல் போன்ற தொந்தரவுகள் அதிகமிருக்க வாய்ப்புள்ளது. 

மேலும் உறைபனி மற்றும் தொடர் பனி பொழிவினால் தாவரங்கள் கருகுவதற்கு வாய்ப்புள்ளது! என்று எச்சரித்துள்ளனர். ஆனால் இந்த கணிப்பெல்லாம் பொதுவான சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து மட்டுமே வந்துள்ளன. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறையானது பனிக்கால ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை இனிதான் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

-ஷக்தி 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow