Ajith: ரஷ்யா டூ அஜர்பைஜான்... விடாமுயற்சிக்கு என்ட் கார்டு போடும் அஜித்!
குட் பேட் அக்லி படத்தில் நடித்து வரும் அஜித், விடாமுயற்சிக்கு என்ட் கார்டு போட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக ரிலீஸான துணிவு, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி வரை வசூலித்தது. இதனால் அஜித்தின் அடுத்த படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த ஏகே 62, இயக்குநர் மகிழ் திருமேனி கைக்கு மாறியதோடு, விடாமுயற்சி என்ற டைட்டிலும் உறுதியானது. ஆரம்பம் முதலே இயக்குநர் மாற்றம் என தடங்களோடு ஆரம்பித்த விடாமுயற்சி, இன்னும் விடாத முயற்சியாக இழுத்துக் கொண்டே செல்கிறது. லைகா தயாரித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே ட்ராப் ஆனதாக சொல்லப்பட்டது. ஆனால், அதெல்லாம் வதந்தி என்பதாக விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில், அஜித்தின் கார் ஆக்ஸிடெண்ட்டான வீடியோவை ஷேர் செய்திருந்தது படக்குழு. இதனால் விடாமுயற்சி படம் இன்னும் ட்ராப் ஆகவில்லை என ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதேபோல், இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்னர் தான், குட் பேட் அக்லி தொடங்கப்படும் என சொல்லப்பட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் முடிவுக்கு வராததால், உடனடியாக குட் பேட் அக்லி படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜித்.
இதனையடுத்து குட் பேட் அக்லி படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. முதற்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற அஜித், தொடர்ச்சியாக ஐதராபாத்திலேயே முகாமிட்டுள்ளாராம். இதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் நடைபெறும் படப்பிடிப்பில் அஜித் நடிக்கவுள்ள ஆக்ஷன் காட்சிகளை ஷூட் செய்ய ஆதிக் ரவிச்சந்திரன் பிளான் செய்துள்ளார். ஜூன் இறுதிக்குள் ரஷ்யா ஷெட்யூல் முடிந்துவிடும் என தெரிகிறது. அதன்பின்னர் ரஷ்யாவில் இருந்து அஜர்பைஜான் செல்லும் அஜித், விடாமுயற்சி படத்தில் அவரது போர்ஷன் முழுவதையும் முடித்துவிடுவதாக கூறிவிட்டாராம். அதோடு விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவுபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடாமுயற்சி படத்தை தீபாவளி அல்லது இந்தாண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்துவிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி திரைப்படம் 2025 பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளதால், அதற்கு முன்பே விடாமுயற்சி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி, குட் பேட் அக்லியை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கலாம் எனவும், இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
What's Your Reaction?