Laapataa Ladies Tamil Review: எப்படி இருக்கு லாபதா லேடீஸ்..? ஓடிடி திரை விமர்சனம்!
அமீர்கான் தயாரிப்பில் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ள திரைப்படம் லாபதா லேடீஸ். நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் லாபதா படத்தின் தமிழ் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.
சென்னை: லோ பட்ஜெட், எளிமையான கதையில் இப்படி ஒரு படமா என வியக்க வைக்கிறது லாபதா லேடீஸ். சட்டீஸ்கர் பகுதியில் உள்ள நிர்மல் பிரதேஷ் என்ற கற்பனையான பகுதியை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது இந்தப் படம். தீபக் குமார் என்ற இளைஞனுக்கு ஃபூல் குமாரி என்பவருடன் திருமணம் நடக்கிறது. தனது மனைவியை சொந்த ஊருக்கு ரயிலில் அழைத்துச் செல்கிறான் தீபக் குமார். அதே ரயிலில் திருமணமான இன்னொரு ஜோடியும் பயணிக்கிறது. மணப்பெண்கள் இருவருமே முகத்தை மூடியபடி ஒரே நிற ஆடை அணிந்திருக்கின்றனர்.
தீபக் குமாரின் ஊரில் ரயில் நிற்கும் போது, அவசரத்தில் தனது மனைவியை விட்டுவிட்டு இன்னொரு மணப்பெண்ணுடன் இறங்கி விடுகிறான். ரயில் நிலையத்தில் இருந்து தடபுடலான வரவேற்புடன் வீட்டிற்குச் செல்லும் தீபக் குமார், அங்கே போன பின்னர் தனது மனைவிக்குப் பதிலாக வேறொருவரை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைகிறான். தன்னை புஷ்பா ராணி என அறிமுகம் செய்துகொள்ளும் அவரோ, தீபக் குமார் குடும்பத்தினருடன் நெருக்கமாகிவிடுகிறார். இன்னொரு பக்கம் ஃபூல் குமாரி திக்குத் தெரியாத திசையில் ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் இறங்கி, தனது கணவன் தீபக் குமாரை தேடி அழைகிறார்.
காணாமல் போன இரண்டு பெண்களும் வெவ்வேறு சூழல்களில், புதிய மனிதர்களுடன் பயணிக்கின்றனர். இருவருக்குமே இருவேறுவிதமான தேடல்கள், இலக்குகள், இறுதியாக அவைகள் என்ன ஆனது என்பது தான் லாபதா லேடீஸ் படத்தின் கதை. காணாமல் போகும் இரண்டு பெண்களை பின்னணியாக வைத்து பல அடுக்குகளைக் கொண்ட அடர்த்தியான திரைக்கதையில் பயணிக்கிறது இந்தப் படம். வீட்டில் எல்லா வேலைகளையும் நான் தான் பார்ப்பேன் எனக் கூறும் ஃபூல் குமாரிக்கு, அவரது வீடு எங்கு இருக்கிறது என்பது கூட தெரியாது. அடிப்படை கல்வி அறிவு கூட இல்லாமல், வீட்டிலேயே அடைபட்டு கிடக்கும் பெண்களின் இயலாமைக்கு இந்த ஒரு காட்சி உதாரணம்.
கணவன், மகன் இருவருக்கும் பிடித்த உணவை மட்டுமே சமைத்துக் கொடுப்பதே பெண்களின் வேலையாகிவிட்டது. இதனால் அவர்களுக்கு என்ன உணவு பிடிக்கும் அல்லது வேண்டும் என்பதே மறந்துவிடுகிறது. இதையும் ஒரு காட்சியில் போகிறப் போக்கில் நச்சென்று பதிவு செய்கிறார் இயக்குநர். முகம் தெரியாத அளவிற்கு முக்காடு போட்டு எடுகப்பட்ட மனைவியின் போட்டோவை வைத்து அவரை தேடுகிறார் தீபக் குமார். அப்போது முகம் தான் மனிதனின் அடையாளம் என வசனம் இடம்பெறும் காட்சியில், இயக்குநர் வைத்த பஞ்ச் டைமிங் காமெடி அட்டகாசம். கல்வி, உணவு, உடை உட்பட அடிப்படையில் பெண்களுக்கு என்ன தேவை என்பதையும், அதற்கு எதிரான நடைமுறை சிக்கல்களையும் யதார்த்தமான வாழ்வியலோடு பதிவு செய்துள்ளது லாபதா லேடீஸ். முக்கியமாக வரதட்சனை பற்றிய காட்சிகளும் வசனங்களும் கவனிக்க வைத்துள்ளன.
தீபக் குமாராக ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவ், தனது அப்பாவித் தனத்தால் மனைவியை தொலைத்துவிட்டு களங்குவதிலும், அவரைத் தேடி காதலுடன் பரிதவிப்பதிலும் பாஸ் ஆகியுள்ளார். ஃபூல் குமாரி கேரக்டரில் நிதன்ஷி கோயல், கதைக்குத் தேவையான இயலாமை, அப்பாவித்தனம் இரண்டையும் ஓவர் டோஸ் இல்லாமல் எதார்த்தமாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார். ஜெயா, புஷ்ப ராணி என ஆள்மாறாட்டம் செய்யும் கேரக்டர் என்றாலும், அதில் தனித்து நிற்கிறார் பிரதிபா ரந்தா. இவர்களை விட நடிப்பில் அட்டகாசம் செய்துள்ளது இன்ஸ்பெக்டராக நடித்துள்ள ரவி கிஷன் தான். ஆரம்பத்தில் காமெடி ப்ளஸ் நெகட்டிவ் ஷேட் கேரக்டரில் கவனம் ஈர்க்கும் ரவி கிஷன், க்ளைமேக்ஸில் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் மொமண்ட் கொடுத்துள்ளார்.
ராம் சம்பத்தின் இசை, விகாஷ் நவ்லகாவின் சினிமோட்டோகிராபி படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை வசனங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு நேர்த்தியாக கதையுடன் கனெக்ட் ஆகியுள்ளன. 2 மணி நேரம் ரன்னிங் டைம் கொண்ட லாபதா லேடீஸ் ஓடிடி ரசிகர்களுக்கான தரமான படம். ஆடியோ இந்தியில் மட்டுமே இருந்தாலும் ஆங்கிலம் சப் டைட்டில் இருப்பதும், புரியும்படியான திரைக்கதையும் அனைத்து மொழி ரசிகர்களையும் ரசிக்க வைக்கிறது. எல்லா விதங்களிலும் லாபதா லேடீஸ் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளார் இயக்குநர் கிரண் ராவ். மனிதர்கள் எங்கு தொலைந்து போனாலும் அவர்களை மனிதம் மீட்டெடுக்கும் என்ற ஆன்மாவோடு, பெண்களின் அடிப்படை உரிமைகள், பிரச்சினைகள் பற்றிய உரையாடல்கள் நிறைந்த கலைப் படைப்பாக மிளிர்கிறது லாபதா லேடீஸ்.
What's Your Reaction?