என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் சலாம்- ரஜினிகாந்த் வாழ்த்து

உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனக்கூறி தனது மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Feb 9, 2024 - 10:16
Feb 9, 2024 - 18:01
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் சலாம்- ரஜினிகாந்த் வாழ்த்து
லால் சலாம் திரைப்படம் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ளது. இந்தப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மும்பை ரிட்டன்ஸ் மொய்தீன் பாயாக நடித்துள்ளார். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
முன்னதாக லால்சலாம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “தனது தந்தையைப் பலர் சங்கி என அழைக்கின்றனர். அது வேதனையாக உள்ளது. அவர் சங்கியாக இருந்திருந்தால்லால் சலாம்’ படத்தில் நடித்திருக்க மாட்டார்“ என்றார். மேலும், தனது தந்தை நல்ல மனிதநேயவாதி எனவும் அவர் குறிப்பிட்டார். ஐஸ்வர்யாவின் பேச்சைக் கேட்டு நடிகர் ரஜினிகாந்த் கண்ணீர் கலங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இதன்பின்னர் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காக்கா-கழுகு குறித்துத் தான் பேசியதற்கு விளக்கம் அளித்தார். மேலும் விஜய் தனக்குப் போட்டியில்லை எனவும் விஜய்யை போட்டியாக நினைத்தால், அது தனக்கும் அவருக்கும் அழகில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் ரஜினிகாந்த் - விஜய் ரசிகர்கள் இடையே நடந்து வந்த இணையப் போர் முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து படத்திற்கு இன்னொரு சிக்கல் எழுந்தது. அது நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தனது இணையப் பக்கத்தில் தமிழர்கள் குறித்தும், காவிரி நீர், பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள் குறித்து விமர்சித்து ஏற்கனவே பதிவிட்டிருந்தார். இதனால் கொதித்தெழுந்த இணையவாசிகள் படக்குழுவையும், ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாவையும் குறிப்பிட்டு கேள்விகளை எழுப்பினர். படத்தில் நடிக்க வேறு நடிகையே கிடைக்கவில்லையா? தமிழர்களை விமர்சித்துப் பதிவிட்ட நடிகையின் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று போர்க்கொடி தூக்கினர்.

இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இதைத்தொடர்ந்து நடிகை தன்யா பாலகிருஷ்ணன் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அதை நான் உண்மையாகப் பதிவிடவில்லை எனவும் தமிழ் மக்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாகவும் தனது அறிமுகமே தமிழ் படத்தில்தான் எனவும் அவர் கூறினார். இதனால் பிரச்சனைகள் ஓய்ந்து படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow