Exclusive: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நியமன விவகாரம்.. துணை வேந்தருக்கு எதிராக கிளம்பிய சிண்டிகேட் உறுப்பினர்கள்
சென்னை: பதிவாளர் நியமன விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் சிண்டிகேட் உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் சிண்டிகேட் உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தன்னிச்சையாக பதிவாளர் நியமனம் செய்துள்ளதாக வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பரந்தாமனிடம் பேசினோம், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நியமனத்திற்கு சிண்டிகேட் உறுப்பினர்களின் ஒப்புதல் அவசியமாகும். இந்த விதிமுறையை துணைவேந்தர் வேல்ராஜ் மீறியுள்ளார். விதிகளின் படி முறையான அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து பெறப்பட்ட பின்னரே சிண்டிகேட் ஒப்பதலுடன் பதிவாளரை நியமனம் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த நிலையில் பதிவாளரை நியமனம் செய்ய தனக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்து தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதாக தெரிவித்தார் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பதிவாளர் நியமனம் நடக்க வேண்டும் என்பதற்காகவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக நம்மிடம் தெரிவித்தார்
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தரப்பில் விசாரித்தோம் கடந்த ஜனவரி மாதம் 269 வது சிண்டிகேட் கூட்டம் நடைபெற்ற போது பதிவாளர் நியமனம் தொடர்பான முடிவு முன்வைக்கப்பட்டது மொத்தம் உள்ள 13 சிண்டிகேட் உறுப்பினர்களில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதற்கு பின்னர் சிண்டிகேட் கூட்டம் தொடர்பான மினிட்ஸ் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட போது அதில் 6 உறுப்பினர்கள் மட்டும் பதிவாளர் நியமனத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற கருத்தை பதிவு செய்தனர். மீதம் உள்ள 7 சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்கின்ற அடிப்படையில் பதிவாளரை நியமனம் செய்ததாக தெரிவித்தனர்.
மேலும் யாரை பதிவாளராக நியமனம் செய்ய வேண்டும் என்கின்ற அதிகாரம் துணைவேந்தருக்கு இருப்பதாகவும்.. தெரிவித்தனர். மற்றபடி துணைவேந்தர் தன்னிச்சையாக பதிவாளரை நியமனம் செய்யவில்லை என்றும் கூறினர். இது குறித்து துணைவேந்தர் வேல்ராஜை தொடர்புகொண்டபோது விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கம் அளிக்க உள்ளதாகவும் கூறினார்
தமிழகத்தின் அடையாளமாக இருக்கும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் விவகாரம் நீதிமன்ற படி ஏறியுள்ள நிலையில் விரைவில் சமூகத் தீர்வு ஏற்பட வேண்டும்
What's Your Reaction?